கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் வரும் மே மாதம் மூன்றாம் தேதிவரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், புதுச்சேரியில் கரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதால், பல்வேறு பகுதிகளில் வழக்கம்போல் கடைகள் இயங்கத் தொடங்கின. மேலும், மாநிலத்தில் ஊரடங்கில் சில தளர்வுகள் அமல்படுத்தப்படவுள்ளதாக தகவல் வெளியானது.
இதுகுறித்து பேசிய புதுச்சேரி மாநில சுகாதாரத் துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணராவ், ”புதுச்சேரியில் கரோனா வைரஸ் பாதிப்பு குறைந்துள்ளபோதிலும், அண்டை மாநிலமான தமிழ்நாட்டில் பல பகுதிகள் கரோனா வைரஸ் அச்சுறுத்தலால் அதிகளவு பாதிக்கப்பட்டுள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு, ஊரடங்கு உத்தரவு தளர்வினை மறுபரிசீலனை செய்யுமாறு முதலமைச்சர் நாராயணசாமிக்கு கோரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது” என்றார்.
முன்னதாக சுகாதாரத் துறை இயக்குனர் மோகன் குமார் பேசுகையில், இந்தியாவிலேயே புதுச்சேரி மாநிலம் அதிகளவு மக்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட மாநிலமாக இருப்பதாகவும், மாநிலத்தில் இதுவரை 9 லட்சத்து 77 ஆயிரம் பேருக்கு கரோனா மருத்துவ சோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இவை ஒருபுறமிருக்க, கரோனா வைரஸினைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்துவரும் நிலையில் சுகாதாரத் துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணராவ் தனது அலுவலக வாயில் பகுதியில் வேப்பிலை கட்டிவைத்தும், அலுவலக நிமித்தமாக மட்டுமே தன்னை சந்திக்க வரவேண்டும் எனவும் அறிவித்து நோட்டீஸ் ஒட்டியுள்ளார்.
இதையும் படிங்க: ஊரடங்கு உத்தரவுக்கான வழிமுறைகளை கடுமையாகப் பின்பற்ற வேண்டும்: அமித் ஷா!