புதுச்சேரி சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணா ராவ் இன்று(ஜூலை 13) செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது; 'புதுச்சேரி மாநிலத்தில் இன்று (ஜூலை 13) கூடுதலாக 50 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கதிர்காமம் மருத்துவக் கல்லூரியில் 400 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அங்கு 600 படுக்கை வசதி இருந்தாலும் கூட, தூய்மைப் பணியில் சிறு பிரச்னை வருகிறது.
அதனால் 100 கரோனா நோயாளிகளை ஜிப்மருக்கு மாற்றுவதற்குக் கடிதம் அனுப்பி உள்ளேன். அதேபோல், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அறிகுறி தெரியாத கரோனா பாசிடிவ் உள்ள 25 நோயாளிகளை மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் மக்கள் தொகை அடிப்படையில் சராசரியாக ஒரு லட்சம் பேரில் 1,505 பேருக்குக் கரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.
இந்நிலையில், புதுச்சேரியில் 2,149 பேருக்கு பரிசோதனை செய்கிறோம் காரைக்காலில் 1,728 பரிசோதனையும், ஏனாமில் 2,354 பரிசோதனையும், மாகேவில் 2,560 பரிசோதனையும் செய்யப்படுகிறது. தேசிய அளவை விட அதிகமாக பரிசோதனை செய்து வருகிறோம். இந்த பரிசோதனையை 4 ஆயிரம் வரை எடுக்கவும் தயாராக உள்ளோம். பரிசோதனை செய்து கொள்வதற்கு யார் வந்தாலும் திரும்பி அனுப்பப்படுவதில்லை. காய்ச்சல், சளி இருந்தாலும், இல்லாவிட்டாலும் யாருக்காவது சந்தேகம் இருந்தால் வந்து பரிசோதனை செய்து கொள்ளலாம்.
மக்கள் ஒத்துழைப்பு இல்லாமல் எதுவும் செய்ய முடியாது. எனவே, பெரும்பாலான நேரம் வீட்டிலேயே இருங்கள். அத்தியாவசியத் தேவைக்காக மட்டும் வெளியே வந்து செல்லுங்கள். முகக்கவசம் அணியுங்கள், தகுந்த இடைவெளியைக் கடைப்பிடியுங்கள். எதைத் தொட்டாலும் உடனே கையைக் கழுவுங்கள். இதனை செய்தால் தொற்றை கட்டுக்குள் கொண்டு வரலாம்' எனக் கூறினார்.
இதற்கிடையே புதுச்சேரி நகராட்சி ஊழியர்களுக்குக் கரோனா குறித்த பரிசோதனை பொட்டானிக்கல் கார்டன் பகுதியில் நடத்தப்பட்டது. அப்போது சுகாதார அமைச்சர் மல்லாடி கிருஷ்ணா ராவ் நேரில் சென்று ஆய்வு செய்தார்.