புதுச்சேரியின் காரைக்கால் மாவட்டத்தில் கடந்த பல ஆண்டுகளாக நீர் ஆதாரங்கள் பராமரிப்பின்றி இருந்ததால், கடும் தண்ணீர் பிரச்னை நிலவியது. இந்நிலையில், உச்ச நீதிமன்றம் காவிரி தொடர்பான இறுதித் தீர்ப்பில், காரைக்கால் மாவட்டத்திற்கு 7 டிஎம்சி நீர் வழங்க வேண்டுமென உத்தரவிட்டதன் மூலம், காரைக்காலின் வேளாண்மை, குடிநீர் போன்றவற்றுக்கான தேவை பூர்த்தியாகும் உத்தரவாதம் கிடைத்தது.
இவற்றைப் பயன்படுத்தி காரைக்காலில் நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த வேண்டும் என்ற புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி, முதலமைச்சர் நாராயணசாமி, வேளாண் துறை அமைச்சர் கமலக்கண்ணன் ஆகியோரின் ஆலோசனையின் பேரில், காரைக்காலில் 'நம் நீர்' திட்டத்தை கடந்த 2019ஆம் ஆண்டு உருவாக்கினர்.
![புதுச்சேரி முதலமைச்சரின் செயலர்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-ngp-05-award-of-excellence-script-7204630_29082020230004_2908f_1598722204_543.jpg)
இதை, அப்போதைய காரைக்கால் மாவட்ட ஆட்சியர் விக்ராந்த் ராஜா 'நம் நீர்' திட்டத்தை மூன்று மாத காலத்தில் சிறப்பாக செயல்படுத்தி அரசின் நிதி உதவியின்றி தன்னார்வலர்களை கொண்டு காரைக்காலில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட குளங்கள், சோர்ந்துபோன குளங்கள் என 178 குளங்களை தூர்வாரி நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தி, நீர்நிலைகளில் தண்ணீரை சேமித்தார். இதன் மூலம் ஒரு டிஎம்சி காவிரி நீர், மழை நீரைச் சேமிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டது.
![மத்திய அரசு விருது](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-ngp-05-award-of-excellence-script-7204630_29082020230004_2908f_1598722204_163.jpg)
மூன்று மாத காலத்திற்குள் சிறப்பான திட்டமாக நிறைவேற்றி முடித்த அப்போதைய ஆட்சியர் விக்ராந்த் ராஜாவை முதலமைச்சர், துணை நிலை ஆளுநர் உள்ளிட்ட பலரும் பாராட்டினர். தற்போது, மத்திய அரசின் 'ஜல் சக்தி' அமைச்சகத்துடன் இணைந்து பணியாற்றும் 'Elets Technomedia' அமைப்பு 'National water Innovation summit 2020' என்ற உச்சி மாநாட்டை சமீபத்தில் நடத்தியது. இதில் காரைக்கால் முன்னாள் ஆட்சியரும், தற்போதைய புதுச்சேரி முதலமைச்சரின் செயலருமான விக்ராந்த் ராஜாவிற்கு காரைக்கால் மாவட்டத்தில் நீர் மேலாண்மையை செவ்வனே செய்ததை பாராட்டி விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.
இதையும் படிங்க...தமிழ்நாட்டில் பொதுப்போக்குவரத்து இயங்குமா? - முதலமைச்சர் ஆலோசனை