கரோனா அச்சுறுத்தல் காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவினால் புதுச்சேரியில் பெரும்பாலானோர் வேலையினை இழந்து தவித்துவருகின்றனர்.
கிராமப்புறங்களில் உள்ள ஏழைக் குடும்பங்களைப் பாதுகாக்க ஊரக வளர்ச்சி முகமையின் மூலம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தின் வாயிலாக இரண்டாயிரத்து 804 சுய உதவிக்குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
இந்த சுய உதவிக் குழுக்களில் உள்ள 37 ஆயிரத்து மூன்று உறுப்பினர்களுக்கு தலா பத்தாயிரம் ரூபாய், உணவு, மருத்துவப் பாதுகாப்பிற்காக வங்கிகள் மூலம் கடனுதவி ஆகியவை வழங்க 37 கோடி ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி மாவட்டத்தில் இதுவரை ஐந்தாயிரத்து 423 சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு 504.15 லட்ச ரூபாய் மதிப்பிலான கடன் வழங்கப்பட்டுள்ளது.
மீதமுள்ள உறுப்பினர்களுக்கு விரைவில் கடன் வழங்க ஆவனசெய்வது குறித்து முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் சட்டப்பேரவையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் இந்தியன் வங்கியின் துணைப் பொதுமேலாளர் வீரராகவன், ஊரக வளர்ச்சித் துறை செயலாளர், மாநில கூடுதல் திட்ட இயக்குநர் உள்ளிட்ட அனைத்து வங்கிப் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: ‘அடுத்த ஒரு வருடத்திற்கு தயார் நிலையில் இருக்க வேண்டும்’ - முதலமைச்சர் நாராயணசாமி