புதுச்சேரியில், முதலமைச்சர் அலுவலகத்தில் பணிபுரியும் தட்டச்சு ஊழியர் ஒருவருக்கு நேற்று முன்தினம் கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து, முதலமைச்சர் அலுவலகம் முழுவதும் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டு, ஒரு வாரத்திற்கு மூடப்பட்டுள்ளது.
இந்நிலையில், முதலமைச்சர் நாராயணசாமி உள்ளிட்ட 84 அலுவலக ஊழியர்கள், பாதுகாப்புக் காவலர்களுக்கு நேற்று கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்தப் பரிசோதனையின் முடிவுகள் நேற்று வெளியானது. அதில், முதலமைச்சர் உள்பட அலுவலக ஊழியர்கள் யாருக்கும் தொற்று பாதிப்பு இல்லை எனத் தெரியவந்தது. பாதுகாப்பு வீரர்கள், சட்டப்பேரவைக் காவலர்களுக்கான பரிசோதனை முடிவுகள் வர தாமதமாகியுள்ளது.
தொற்று பாதிப்பு இல்லையென்றாலும் முதலமைச்சர் நாராயணசாமி பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டாம் என்றும், ஐந்து நாள்களுக்குத் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறும் அம்மாநிலச் சுகாதாரத் துறை அறிவுறுத்தியிருந்தது. ஆனால், அதனைக் கடைப்பிடிக்காமல் நாராயணசாமி கரோனா பாதிக்கப்பட்டுள்ள புதுச்சேரி மண்ணாடிபட்டு கட்டுப்பாட்டுப் பகுதியில் ஆய்வு மேற்கொண்டார்.
இதற்குப் புதுச்சேரியிலுள்ள பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்திருந்தன. இந்நிலையில், இன்று திருக்காஞ்சியில் கரோனா தொற்று நீங்க சிறப்பு யாகம் நடைபெற்றது. இந்த யாகத்தில் முதலமைச்சர் நாராயணசாமி பங்கேற்று, அதனைஹ் தொடங்கிவைத்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.