காரைக்காலில் மாங்கனித் திருவிழா ஆண்டுதோறும் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். காரைக்கால் அம்மையாரின் வாழ்க்கை வரலாற்றை நினைவுகூறும் வகையில் ஆண்டுதோறும் இத்திருவிழா நடத்தப்படுகிறது.
கரோனா பொதுமுடக்கம் காரணமாக இந்த ஆண்டு மாங்கனித் திருவிழா நடைபெறுமா என்ற குழப்பம் நீடித்து வந்த நிலையில் புதுச்சேரி அரசு அதற்கு அனுமதி அளித்ததையடுத்து காரைக்கால் அம்மையாரின் மாங்கனித் திருவிழா நேற்று (ஜுலை 1) மாலை மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியுடன் தொடங்கியது.
மாங்கனித் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான காரைக்கால் அம்மையாரின் திருக்கல்யாண வைபவம் இன்று காலை நடைபெற்றது. மேள, தாள வாத்தியங்கள் முழங்க திருமாங்கல்யம் நாண் ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. புனிதவதியார் என்று அழைக்கப்படும் காரைக்கால் அம்மையாருக்கும், பரமதத்தருக்கும் நடைபெற்ற திருக்கல்யாண வைபவத்தில் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள் கந்தசாமி, கமலக்கண்ணன், மல்லாடி கிருஷ்ணாராவ் உள்ளிட்டோர் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டதால் காவல் கண்காணிப்பாளர் வீர வல்லபன் தலைமையில் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க... காரைக்கால் அம்மையார் கோயில் மாங்கனி திருவிழா தொடங்கியது