கரோன நோய் தடுப்பு நடவடிக்கைகளைப் புதுச்சேரியில் அம்மாநில அரசு தீவிரமாக எடுத்துவருகிறது. இதனால் ஆலைகள், வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதால் தொழிலாளர்கள் பலர் வேலை இழந்துள்ளனர்.
இந்நிலையில், பேரிடர் கால நடவடிக்கையாக அரசு சார்பில் சிவப்பு குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச அரிசி வழங்கப்பட்டுவருகிறது. இதனையடுத்து மஞ்சள் அட்டைதாரர்களுக்கும் இலவச அரிசி வழங்க வேண்டும் என அரசியல் கட்சிகள் கோரிக்கைவைத்தன.
இந்நிலையில், அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் அன்பழகன் தலைமையில், உறுப்பினர்கள் பாஸ்கரன், வையாபுரி மணிகண்டன் ஆகியோர் இன்று சட்டப்பேரவை வளாகத்தில் திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது கையில் பதாகைகளை ஏந்தியவாறு அவர்கள் போராட்டத்தில் அமர்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. போராட்டத்திற்கு இடையே செய்தியாளர்களிடம் பேசிய அன்பழகன், ”ஆளும் காங்கிரஸ் அரசும், துணைநிலை ஆளுநர் கிரண்பேடியும் மோதல் போக்கில் உள்ளதால் பொதுமக்கள் பிரச்னைகள் குறித்து கவலைப்படாமல் உள்ளனர்.
அரசிடம் மஞ்சள் அட்டைதாரர்களும் வறுமைக் கோட்டிற்குகீழ் உள்ளனர். எனவே இலவச அரிசியை அவர்களுக்கும் வழங்க வேண்டும் என்று அதிமுக சார்பில் பலமுறை கோரிக்கைவிடுத்துள்ளோம். ஆனால், ஆளும் காங்கிரஸ் அரசு அதனைக் காதில் வாங்கிக் கொள்ளாமல் மெத்தனமாக உள்ளது. எனவே அரசு அனைத்து மஞ்சள் குடும்ப அட்டைதாரர்களுக்கும் இலவச அரிசியை உடனே வழங்க வேண்டும் ” என்று வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: கரோனா - போலிச் செய்திகளை வெளியிட்ட செய்தியாளர் கைது!