காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்திக்கு எஸ்.பி.ஜி பாதுகாப்பு அண்மையில் திரும்பப் பெறப்பட்டது. இந்த காரணத்தால் டெல்லி லோதி சாலையில் உள்ள அரசு பங்களாவை காலி செய்ய வேண்டும் என பிரியங்கா காந்திக்கு, மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இதையடுத்து, அவர் வீட்டை காலி செய்ய போகிறார் என்றும், உத்தரப் பிரதேசத்திற்கு குடியேறும் முயற்சியில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர், தனது இரண்டு மாடி வீட்டை பிரியங்காவுக்குத் தர முன்வந்துள்ளார்.
வாரணாசி பகுதியைச் சேர்ந்த காங்கிரஸ் பிரமுகரான புனீத் மிஸ்ரா, தனது வீட்டை பிரியங்கா காந்திக்காக தயார் செய்து வீட்டின் முன் "H/O Priyanka Gandhi Vadra, General Secretary, All India Congress Committee (AICC)" எனப் பெயர் பொறித்த பதாகையை வைத்துள்ளார்.
பிரியங்கா காந்தியின் தீவிர ஆதரவாளரான அவர், மனம் உவந்து மகிழ்ச்சியுடன் தனது வீட்டைத் தர முன்வந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். மேலும், அடுத்தாண்டு உத்தரப் பிரதேச மாநில பொதுத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பிரியங்கா இந்தத் தேர்தலில் முக்கிய பங்காற்றி காங்கிரஸ் வெற்றிபெற இந்த வீட்டை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதையும் படிங்க:அரசு பங்களாவை காலி செய்வாரா பிரியங்கா காந்தி?