கடந்த 2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 11ஆம் தேதியன்று துணை குடியரசுத் தலைவராக வெங்கையா நாயுடு பொறுப்பேற்றார். துணை குடியரசுத் தலைவராக மூன்றாண்டுகளை நிறைவு செய்த அவரை வாழ்த்தி இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அதில், "துணை குடியரசுத் தலைவராக பொறுப்பு வகிக்கும் உங்களிடமிருந்து அறிவு, ஆற்றல் மற்றும் மக்கள் மீதான உற்சாக ஆர்வம், தேசத்திற்கான நீடித்த வளர்ச்சிக்கான ஆக்கபூர்வமான உழைப்பு என கற்றுக்கொள்வதற்கு நிறைய உள்ளது. ஒரு தலைமுறையின் உத்வேகமான தலைவராக திகழ்பவர் நீங்கள்.
மாநிலங்களவையின் தலைவராக முன்னெப்போதும் இல்லாத வகையில் அவையை வழி நடத்தி சாதனை படைத்த உங்கள் அரசியல் மேதைமையும், நல்லாட்சி வழிநடத்தலையும் எடுத்துரைப்பதாகவே நான் கருதுகிறேன்.
சட்டம் மற்றும் அரசியலமைப்பு பற்றிய உங்களது ஆழமான புரிதல் பொது சேவைப் பணியில் நீதி வழுவாத அணுகுமுறையை எடுக்க உங்களுக்கு உதவியது. உங்கள் பொதுப் பணி எப்போதும் கடை நிலை மக்கள் அனைவரையும் உள்ளடக்கியதாகவே இருந்துவந்துள்ளது. வலுவான இந்தியாவை உருவாக்குவதற்கும் ஒரு உள்ளார்ந்த தூண்டுதலை வழங்குகிறது என்பதை மறுக்கவே முடியாது.
துணை குடியரசுத் தலைவராக நீங்கள் மூன்று ஆண்டுகளை நிறைவு செய்வதை எண்ணி மகிழ்கிறேன். உங்களது உடல் நலனிற்காக நான் இறைவனைப் பிரார்த்தனை செய்கிறேன். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.