அரங்க பஞ்சமி என்று அழைக்கப்படும் ஹோலி பண்டிகை இந்தியா மட்டுமில்லாது, நேபாளம், வங்கதேசம், மொரீசியஸ் போன்ற இந்தியர்கள் அதிகம் வாழும் நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது.
இதில் வயது வித்தியாசமின்றியும், ஆண் பெண் பேதமின்றியும் அனைவரும் ஒருவருக்கு ஒருவர் வண்ணங்களைப் பூசி மகிழ்ச்சிகளையும், அன்பையும் பரிமாறி ஹோலி பண்டிகையை மிக விமரிசையாக கொண்டாடுவர். இந்நிலையில் நேற்று தொடங்கிய ஹோலி பண்டிகையின் இரண்டாவது நாளான இன்று நாடு முழுவதும் மக்கள் மிக விமரிசையாக கொண்டாடி வருகின்றனர். இதனிடையே பண்டிகையை முன்னிட்டு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி ஆகியோர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
இது குறித்து குடியரசுத்தலைவர் வெளியிட்டுள்ள பதிவில், "ஹோலி பண்டிகையை கொண்டாடும் இந்த மங்களகரமான நாளில் இந்தியாவில் வசிக்கும் சக குடிமக்களுக்கு சிறந்த வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். வசந்த காலத்தில் நடைபெறும் இந்த ஹோலி பண்டிகை, வண்ணமயமாகவும், சகோதரத்துவமாகவும் கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகை தினத்தில் ஒவ்வொரு வாழ்விலும் அமைதி, மகிழ்ச்சி மற்றும் வளம் பெருகட்டும்" எனத் தெரிவித்தார்.
அதேபோல் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்து மடலில், "ஹோலி பண்டிகையில் அனைத்து மக்களுக்கும் எனது சிறந்த வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். நமது ஒற்றுமை மற்றும் நல்லெண்ணத்தின் வெளிப்பாடான இந்த பண்டிகை, மகிழ்ச்சிக்கான ஓர் திருவிழா" எனக் கூறியுள்ளார்.