உற்பத்தி செய்யும் விவசாயப் பொருள்களை நாட்டின் எங்கு வேண்டுமானாலும், தாங்களே விற்பதற்கு முழு சுதந்திரம் அளிக்கும் நோக்கிலும், ஒப்பந்த விவசாயத்திற்கு அனுமதி தரும் வகையிலும் அவசரச் சட்டம் கொண்டு வரப்பட்டது. இதற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் வழங்கியுள்ளார்.
வேளாண் உற்பத்தி பொருள்கள் வணிக ஊக்குவிப்பு அவசரச் சட்டம் 2020, விவசாயிகளுக்கான விலை உத்திரவாதம் மற்றும் வேளாண் சேவைகள் மீதான ஒப்பந்த பாதுகாப்பு அவசரச் சட்டம் 2020 ஆகியவற்றுக்கு மத்திய அமைச்சரவை ஜூன் 3ஆம் தேதி ஒப்புதல் வழங்கியது.
வெங்காயம், உருளைக் கிழங்கு, எண்ணெய் வித்து, சமையல் எண்ணெய், தானியங்கள் ஆகியவற்றை அத்தியாவசியப் பொருள்கள் பட்டியலிருந்து நீக்கும் வகையிலான சட்டத் திருத்தத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வேளாண் மற்றும் விவசாய நலத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஆத்மநிர்பார் பாரத் திட்டம் கீழ் விவசாயிகளின் வருமானத்தைப் பெருக்கும் நோக்கிலான வரலாற்று சிறப்புமிக்க முடிவுகளை மத்திய அரசு எடுத்துள்ளது.
கிராமப்புற இந்தியாவிற்கு ஊக்கம் தந்து, வேளாண் துறையில் சீர்திருத்தம் மேற்கொள்ளும் வகையிலான இரண்டு அவசரச் சட்டங்களுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்கியுள்ளார். இந்தச் சீர்திருத்தங்களை அமல்படுத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்கக்கோரி அனைத்து மாநில முதலமைச்சர்களுக்கும் மத்திய வேளாண் மற்றும் விவசாயத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் கடிதம் எழுதியுள்ளார்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: எல்லை விவகாரம் : இந்திய சீன ராணுவ துணை தளபதிகள் இன்று பேச்சுவார்த்தை