1964ஆம் ஆண்டு மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் பிறந்தவர் அமித் ஷா. இளம் வயது முதலே ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டு அரசியல் பயணத்தைத் தொடங்கிய இவர், தற்போது இந்தியாவின் உள்துறை அமைச்சர் என்ற நிலைக்கு உயர்ந்துள்ளார்.
பாஜக தலைவர், நாட்டின் உள்துறை அமைச்சர் என்பதையெல்லாம் கடந்து மோடியின் நெருங்கிய நண்பர் என்பதும் இவருக்கான அடையாளங்களில் ஒன்றாக மாறிப்போனது. ஏனெனில், குஜராத் மாநிலத்தின் முதலமைச்சராக மோடி இருந்தபோது அவருக்கு அடுத்த நிலையில் இருந்த அமித் ஷா, இப்போதும் அதே நிலையில் தன்னை நிறுத்திக்கொண்டு மோடிக்கு உறுதுணையாக இருந்துவருகிறார்.
பொதுவாக மாநிலத்தின் முதலமைச்சர்களாக இருப்பவர்கள் உள்துறையை தங்களின் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொள்ளவே விருப்பப்படுவர். ஆனால், அதற்கு விதிவிலக்காக, மோடி அமைச்சரவையில் உள்துறை அமைச்சர் என்ற தனி இலாகாவை உருவாக்கி அதற்கு அமித் ஷா தலைமை வகித்துவந்தார். தற்போது அதே நிலை மத்திய ஆட்சியிலும் தொடர்கிறது.
இந்த நிலையில், இன்று தனது 55ஆவது பிறந்தநாளைக் கொண்டாடும் அமித் ஷாவுக்கு பிரதமர் மோடி தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “அனுபவமும், திறமையும் நிறைந்த அமித் ஷாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். அமைச்சரவையில் சிறப்பாக பணியாற்றுவது மட்டுமின்றி நாட்டின் ஒற்றுமைக்காகவும் முன்னேற்றத்திற்காகவும் எப்போதும் உழைத்துக்கொண்டிருப்பவர் அவர். அவரின் நல் ஆராக்கியத்திற்கும், நீண்ட ஆயுளுக்கும் எனது வாழ்த்துகள்’ என்று பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: தமிழில் கவிதையை வெளியிட்ட மோடி!