சீன அதிபர் ஜி ஜின்பிங் இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். அவரை தமிழ்நாட்டு ஆளுநர் பன்வாாிலால் புரோகித், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட தலைவர்கள் விமான நிலையம் சென்று வரவேற்றனர். தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்திப்பு பல்லவ தேசமான மாமல்லபுரத்தில் நடந்தது.
இந்த நிலையில் இரண்டாவது நாளாக சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் பிரதமர் நரேந்திர மோடியும் சந்தித்துக் கொள்கின்றனர். பிரதமர் நரேந்திர மோடி, கோவளம் தாஜ் ஓட்டலில் தங்கியிருந்தார். அவரைக் காண ஜி ஜின்பிங், கிண்டி ஐ.டி.சி. கிராண்ட் ஓட்டலில் இருந்து காரில் சாலை மார்க்கமாக கோவளம் வந்தார். இதையடுத்து அவரை நரேந்திர மோடி கைகுலுக்கி ஆரத்தழுவி வரவேற்றார்.
தொடர்ந்து இருவரும் சுற்றுச் சூழலுக்கு தீங்கிழைக்காத பேட்டரி காரில் சிறிது தூரம் பயணித்தனர். அப்போது அவர்கள் இருவரும் மகிழ்ச்சியாக உரையாடிக் கொண்டிருந்தனர். இதையடுத்து இருநாட்டுத் தலைவர்களும் முறைப்படி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இந்தப் பேச்சுவார்த்தை கண்ணாடி அறைக்குள் நடந்தது. கண்ணாடி அறை கடல் அழகை ரசிக்கும்படி அமைந்துள்ளது.
இருநாட்டுத் தலைவர்களும் பாதுகாப்பு, வர்த்தகம், இருதரப்பு உறவுகள், எல்லைப் பிரச்னைகள் குறித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட வாய்ப்புள்ளது. அந்தப் பேச்சுவார்த்தை தற்போது தொடங்கியது. மோடியும் ஜி ஜின்பிங்கும் கண்ணாடி அறைக்குள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுவருகின்றனர்.