இந்தியாவில் கோவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு வரும் மே 17ஆம் தேதியுடன் ஊரடங்கு நிறைவடையவுள்ளது. நாட்டின் பொருளாதாரத்தைக் கருத்தில் கொண்டு பச்சை மற்றும் ஆரஞ்சு மண்டலங்களில் சில தளர்வுகள் அமல்படுத்தப்பட்டன.
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி மதியம் 3 மணிக்கு காணொலி மூலம் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட பின் மோடி இவ்வாறு மாநில முதலமைச்சர்களுடன் ஆலோசனையில் ஈடுபடுவது இது ஐந்தாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது.
சிவப்பு மண்டலத்திலுள்ள மாவட்டங்களை ஆரஞ்சு, பச்சை மண்டலங்களாக மாற்ற எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் பொருளாதாரத்தை மீட்டெடுக்க எடுக்க வேண்டிய அடுத்தக்கட்ட திட்டங்களைக் குறித்தும் இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
50 நாள்களுக்கு மேல் நாட்டில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் மாநிலங்களின் வருவாயும் பொருளாதாரமும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பது குறித்தும் பிரதமர் மோடி ஆலோசிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் இதுவரை 62,939 பேர் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 2,109 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதையும் படிங்க: 10 மாநிலங்களில் புதிதாக யாருக்கும் கரோனா இல்லை - ஹர்ஷ் வர்தன்