சீனாவில் முதலில் அறியப்பட்ட புதிய கரோனா வைரஸான கோவிட்-19 பெருந்தொற்று நோய் உலகின் 170க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி உள்ளது. இந்தியாவில் இந்த வைரஸ் தாக்குதலுக்கு 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக கடந்த மாதம் (மார்ச்) 22ஆம் தேதி ஒரு நாள் மக்கள் ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டது. தொடர்ந்து 21 நாள்கள் இது நீட்டிக்கப்பட்டது.
முன்னதாக மாநிலங்கள், மாவட்டங்கள் மட்டுமின்றி சில கிராம எல்லைகளும் மூடப்பட்டன. மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர். வர்த்தகம் உள்ளிட்டவை கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளன.
எனினும் வைரஸின் பரவல் தீவிரம் குறையவில்லை. இதனால் ஊரடங்கு உத்தவை நீட்டிக்க வேண்டும் என பல மாநில அமைச்சர்கள் பிரதமர் நரேந்திர மோடிக்கு கோரிக்கை விடுத்தனர். இந்த நிலையில் மகாராஷ்டிரா, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் ஊரடங்கு வருகிற 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் மத்திய அரசு அறிவித்திருந்த ஊரடங்கு உத்தரவு இன்றுடன் நிறைவு பெறுகிறது. இதையடுத்து இன்று (ஏப்ரல்14) பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார். பல மாநில முதலமைச்சர்கள் கோரிக்கை விடுத்துள்ளதால் சில தளர்வுகளுடன் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படும் என்றே தெரிகிறது.