டெல்லி ஷாகீன் பாக் போராட்டத்தில் ஈடுபட்டு புகழடைந்த 75 வயது மூதாட்டி அஸ்மா காத்தூன், மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்றார். இப்போராட்டத்தில் காந்தியின் கொள்ளுப்பேரனான துஷார் காந்தி, அம்பேத்கரின் பேரன் ராஜ்ரத்னா அம்பேத்கர் ஆகியோர் இந்தப் போராட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாகப் பங்கேற்றனர்.
இந்தப் போராட்டத்தில் பேசிய அஸ்மா காத்தூன், நாட்டின் பிரதமருக்கு குடும்பத்தினரின் இழப்பு, இறப்பின் அருமை தெரியவில்லை எனவும், பிள்ளைகளின் இழப்பின் வலி என்ன என்பதை அவர் அறிவாரா எனவும் கேள்வி எழுப்பினார். குடும்பத்தைப் பார்த்துக்கொள்ள தெரியாத நபர் எப்படி நாட்டைப் பார்த்துக்கொள்ள முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.
பின்னர் பேசிய துஷார் காந்தி, நாட்டு மக்கள் ஒற்றுமையுடன் இருந்து எந்தவித தூண்டுதலுக்கும் செவிகொடுக்காமல் இருக்கவேண்டும் என்றும், மம்தா போன்ற முதலமைச்சரை பெற மேற்கு வங்கம் அதிர்ஷ்டம் பெற்றுள்ளதாகவும் கூறினார். அவருக்கு முழு ஒத்துழைப்பையும் மாநில மக்கள் வழங்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை வைத்தார்.
தொடர்ந்து பேசிய ராஜ்ரத்னா அம்பேத்கார், பிரதமர் மோடியும் அமித் ஷாவும் அம்பேத்கர் இயற்றிய அரசியலமைப்புச் சட்டத்தைப் பின்பற்றி அரசு நடத்த வேண்டுமே தவிர கோல்வால்கரின் சட்டத்தைப் பின்பற்றக்கூடாது என்றார்.
இதையும் படிங்க: விளம்பரத்தால் கடுப்பான ஒபாமா!