அமெரிக்காவின் ஓஹியோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் பேராசிரியர் எமரிட்டஸ் வில்லியம் ரோமோசர்ஸ் (Emeritus William Romoser's). இவர் சிவப்பு கோளான செவ்வாயில் உயிர்கள் நிச்சயமாக வாழ்கின்றன என்று உறுதியாக நம்புகிறார்.
அவர் தன்னுடைய கூற்றில், செவ்வாய் கோளில் வசிப்பது ஒருவகையான பூச்சிகள் என்று கூறுகிறார். மேலும் அங்கு ஊர்வன போன்ற புதை படிமங்கள் மற்றும் உயிரினங்களும் அங்கு வசிக்கின்றன என்கிறார்.
இதுகுறித்து அவர், “ செவ்வாய் கோள் குறித்து பல்வேறு கட்ட ஆராய்ச்சிகளை நடத்தி வருகிறோம். செவ்வாய் கோள் பற்றிய புகைப்படங்களை கொண்டு ஆராய்ச்சி நடத்தியபோது அங்கு ஜீவராசிகள் உயிர்வாழ்கின்றன அல்லது உயிர் வாழ்ந்துள்ளன என்று நம்புகிறோம். ஏனெனில் அந்தப் புகைப்படங்களில் ஊர்வன உள்ளிட்ட புதைபடிமங்களை காணமுடிகிறது.
இதுமட்டுமின்றி இறக்கையுள்ள பூச்சிகளைப் போன்ற உயிரினங்கள் இருக்கலாம். அவைகள் ஒருவகை தேனீக்களாக இருக்கலாம். கியூரியாசிட்டி ரோவர் அனுப்பியுள்ள புகைப்படங்களை வைத்து பார்க்கும்போது இதனை தெளிவாக பார்க்கலாம். இவ்வாறு ஆராய்ச்சியாளர் பேராசிரியர் ரோமோசர்ஸ் தனது ஆய்வு குறித்து கூறுகிறார்.
ரோமோசர்ஸ் செவ்வாய் குறித்த தனது ஆராய்ச்சியில் எலும்பு எச்சங்கள் மற்றும் பூச்சிகள் ஒருவருக்கொருவர் நெருக்கமாக இருக்கும் வடிவங்களைக் கவனித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் இதுதொடர்பாக வேறு அளவுகோள்களை அவர் குறிப்பிடவில்லை.
எனினும் இந்தப் புகைப்படங்கள் குறித்து விஞ்ஞானிகள் இடையே ஒருமித்த கருத்து ஏற்படவில்லை. ஆனாலும் செவ்வாயில் உயிரினங்கள் வாழ்ந்ததற்கான அடிப்படை காரணிகள் கிடைத்திருப்பதாக விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.
பூமியில் உள்ள பூச்சிகள் (தேனீ உள்பட) மற்றும் பாம்பு உள்ளிட்ட உயிரினங்களும், செவ்வாயில் வாழ்ந்ததாக நம்பப்படும் உயிரினங்களும் பார்க்க ஒரே மாதிரியாக இருக்குமா? அல்லது வேறு வேறு உடலமைப்பை கொண்டிருக்குமா? என்பன போன்ற பல்வேறு கேள்விகளுக்கு விடை கிடைக்க ஆராய்ச்சி தொடர்வதாக விஞ்ஞானிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: விரைந்து நடைபெற்று வரும் 'ககன்யான்' திட்டப்பணிகள் - விமானப்படை தகவல்