மத்திய அரசின் பிராந்திய இணைப்புத் திட்டமான உதானின் கீழ், உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள டேராடூன்-நியூ தெஹ்ரி-ஸ்ரீநகர்-கெளசார் பாதையில் பவன் ஹான்ஸ் லிமிடெட் (பி.எச்.எல்) நேற்று (ஜூலை 29) ஹெலிகாப்டர் சேவையை அறிமுகப்படுத்தியது. உத்தராகண்ட் முதலமைச்சர் திரிவேந்திர சிங் ராவத்துடன் இணைந்து உதான் வழித்தடத்தை திறந்து வைப்பதில் மகிழ்ச்சி அடைவதாக விமான போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த தி்ட்டத்தின் மூலம், நியூ தெஹ்ரி மற்றும் ஸ்ரீநகரில் மேலும் ஆறு வழிகளையும் இரண்டு ஹெலிபோர்டுகளையும் சேர்த்துள்ளோம். இந்த வழித்தடங்கள் மலை மாநில மக்களுக்கு மிகவும் தேவையான விமான இணைப்பை வழங்குகின்றன என்றும், சேவையைப் பெறுவதற்கான செலவு மலிவு என்றும் குறிப்பிட்டார்.
பிராந்திய விமான இணைப்பை மேம்படுத்த பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, 2016ஆம் ஆண்டில் உதான் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இத்திட்டத்தின் கீழ், மத்திய, மாநில அரசுகள், விமான நிலைய ஆபரேட்டர்கள் ஆகியவற்றின் சலுகைகளின் அடிப்படையில் நிதி சலுகைகள் தேர்ந்தெடுக்கப்பட்ட விமான ஆபரேட்டர்களுக்கு நீட்டிக்கப்படுகின்றன.
உதான் விமானங்களில் குறைந்தபட்சம் இருக்கைகள் மானிய விலையில் வழங்கப்படுவதால், பங்கேற்கும் கேரியர்களுக்கு ஒரு குறிப்பிட்ட அளவு நம்பகத்தன்மை இடைவெளி வழங்கப்படுகிறது.