இந்தியா - பாகிஸ்தான் இடையே 1971ஆம் ஆண்டு போர் நடந்தது. இந்தப் போரின் விளைவாக வங்கதேச நாடு உருவானது. இதற்கு பிறகும்கூட இரு நாடுகளுக்கிடையே பதற்றம் நிலவியதால், அமைதி திரும்பும் வகையில் சிம்லா ஒப்பந்தம் 1976ஆம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தின்படி இந்தியா - பாகிஸ்தான் இடையே சம்ஜவுதா விரைவு ரயில் சேவை தொடங்கப்பட்டது.
திங்கள், வியாழன் ஆகிய கிழமைகளில் பாகிஸ்தான் லாகூரிலிருந்து இந்த ரயில்சேவை இயக்கப்பட்டுவருகிறது. இந்நிலையில், காஷ்மீருக்கு அளிக்கப்பட்டுவந்த சிறப்புத் தகுதியை இந்திய அரசு நீக்கியது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த பாகிஸ்தான், இந்தியாவுடனான வணிகத்தை நிறுத்தியது. தற்போது, சம்ஜவுதா ரயில் சேவையையும் பாகிஸ்தான் அரசு நிறுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கிடையே பதற்றம் நிலவிவருகிறது.