பாகிஸ்தான் துருப்புகள் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தொடர்ந்து 5ஆவது நாளாக ஜம்மு காஷ்மீர் சர்வதேச எல்லைப் பகுதியில் தொடர்ச்சியான தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.
இதற்கு இந்திய ராணுவம் பதில் தாக்குதல் நடத்தியுள்ளது. இது தொடர்பாக இந்திய ராணுவ வட்டாரத் தகவல்கள், “நேற்றிரவு 10.30 மணிக்கு பாகிஸ்தான் படைகள் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாலக்கோட் மற்றும் ஷாபூர் உள்ளிட்ட இந்திய நிலைகள் மீது சிறிய ரக துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர். அவர்களுக்கு இந்திய ராணுவம் அவர்களின் பாணியிலேயே பதிலடி கொடுத்தது” என்கின்றன.
பாகிஸ்தான் படைகள் கடந்த வாரம் சுந்தர்பானி-நவ்ஷோரா உள்ளிட்ட இந்திய நிலைகள் மீது தாக்குதல் நடத்தின. இந்தாண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் பிப்ரவரி 23ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் பாகிஸ்தான் படைகள் 646 முறை தாக்குதல் நடத்தியுள்ளன.
கடந்தாண்டு 3,200 தடவை பாகிஸ்தான் ராணுவத்தினர் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தாக்குதல் நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.