உலகளாவிய பெருந்தொற்றுநோயான கோவிட்-19 பரவலைத் தடுக்க அமல்படுத்தப்பட்ட பொது ஊரடங்கு, 144 தடையால் பொதுமக்கள் மன அழுத்தத்திற்குள்ளாகி இருப்பதாக சுகாதார ஆய்வுகள் கூறுகின்றன.
குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவ இளம்பருவத்தினர் இதனால் மிகுந்த மன உளைச்சலுக்குள்ளாகி இருப்பதாகவும், முன்னெப்போதும் அவர்கள் கண்டிராத ஊரடங்கால் அவர்கள் உளவியலாக சிக்கலுக்குள்ளாகி இருப்பதாகவும் அறிய முடிகிறது. இதனால், அவர்கள் தற்கொலை செய்துகொள்வது போன்ற அதிர்ச்சி முடிவை எடுப்பதாக கவலைக்குரிய செய்தி புலனாகிறது.
இது தொடர்பாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கூறுகையில், "குழந்தைகளிடையே தற்கொலை செய்துகொள்ளும் போக்கு, அதிகரித்து வருவது மிகவும் தீவிரமான சமூகப் பிரச்னையாக மாறியுள்ளது.
தேசிய பொது ஊரடங்கு அறிவிக்கப்பட்ட மார்ச் 24ஆம் தேதி நள்ளிரவு முதல் 18 வயதுக்குக் குறைவான 66 குழந்தைகள் பல்வேறு காரணங்களால் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
அதிக நேரம் கைப்பேசி பயன்படுத்துவது, ஆன்லைன் வகுப்புகளில் கலந்து கொள்ளத் தவறுவது போன்ற பல்வேறு காரணங்களைக் காட்டி பெற்றோர்கள் கண்டிப்பது குழந்தைகள் மத்தியில் தற்கொலை போக்கை அதிகரிக்க காரணமாகி உள்ளது.
இது போன்ற மன அழுத்தத்தை எதிர்கொள்ளும் குழந்தைகளுக்காக அவரச அழைப்பு உதவி மையத்தைத் தொடங்க வேண்டிய அவசியம் அரசுக்கு ஏற்பட்டுள்ளது. பெற்றோர்கள் தங்களது குழந்தைகளின் நலனில் அக்கறை செலுத்துகையில், அவர்களின் உணர்வுகளைப் புண்படுத்தாமல் கையாள வேண்டும் என்பதை உணர்த்துகிறது.
இது குறித்து ஆய்வு செய்ய மனிதவளத் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது" என்றார்.
கேரள சுகாதார அமைச்சர் கே.கே.ஷைலஜா கூறுகையில், "அரசுடன் இணைந்து கேரள மனநலத் துறையும் 'ஒட்டகல்லா ஒப்பமுண்டு' (நீங்கள் தனியாக இல்லை, நாங்கள் உங்களுடன் இருக்கிறோம்) திட்டத்தையும் தொடங்கியுள்ளது.
குழந்தைகளுக்கு மனநல சமூக உதவித் திட்டத்தின் கீழ், சுகாதாரத் துறை குழந்தைகளுக்கான ஆலோசனைகளையும் வழங்கி வருகிறது.
தங்கள் குழந்தைகளின் நடவடிக்கைகளில் மாற்றங்கள் ஏற்படுவதை குடும்ப உறுப்பினர்கள் கண்டால், மாவட்ட உளவியல் உதவி மையத்திற்குத் தெரிவிக்க வேண்டும்" என வலியுறுத்தினார்.
நிலைமையைத் தீவிரமாக கருத்தில் கொண்டு, மாநிலத்தில் குழந்தை தற்கொலைகளைத் தடுப்பது குறித்து ஆய்வு செய்ய தீயணைப்பு மற்றும் மீட்பு சேவைகள் காவல் துறைத் தலைவர் ஆர் ஸ்ரீலேகா தலைமையில் ஒரு குழுவை மாநில அரசு அமைத்துள்ளது.
உதவி தேவைப்படும் குழந்தைகளுக்கு உதவுவதற்காக 14 மாவட்டங்களில் ஒவ்வொன்றிலும் 15 பேர் கொண்ட மாணவர் காவலர் அமைப்புகள் உருவாக்கப்பட உள்ளதாக கேரள காவல் துறை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
மன அழுத்தங்கள் தொடர்பான பிரச்னைகளை எதிர்கொள்ளும் குழந்தைகளுக்கு உதவ, 12-18 வயதுக்கு இடைப்பட்ட குழந்தைகளை இணைக்கும், "எங்கள் குழந்தைகளுக்கான எங்கள் பொறுப்பு" திட்டத்தின் (ORC) கீழ் 'சிரி'அடெல்-ஆலோசனை முயற்சி அரசால் தொடங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.