இந்திய குடியரசுத் தலைவர், குடியரசு துணைத் தலைவர், பிரதமர் உள்ளிட்ட வி.வி.ஐ.பிக்களின் பயணங்களுக்காக 8,400 கோடி ரூபாய் செலவில் இரண்டு சொகுசு விமானங்களை அமெரிக்காவிடமிருந்து மத்திய அரசு கொள்முதல் செய்தது.
நாட்டின் பொருளாதாரம் என்றும் காணாத அளவு வீழ்ச்சியடைந்துள்ள நிலையில், இந்த சொகுசு விமானங்களை வாங்கியுள்ள மத்திய அரசை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன.
இந்நிலையில், இது தொடர்பாக இன்று (அக்.10) தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள ராகுல் காந்தி, "நாட்டின் எல்லைகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுவரும் இந்திய ராணுவத்தினரின் பயன்பாட்டிற்கு, குண்டு துளைக்காத பாதுகாப்பான கனரக வாகனங்கள் இல்லாதபோது, பிரதமர் மோடிக்கு 8,400 கோடி ரூபாயில் சொகுசு விமானம் தேவைதானா?
பிரதமர் நரேந்திர மோடியின் நண்பரான டொனால்ட் ட்ரம்ப் இதைப் போன்று ஒரு விமானம் வைத்துள்ளதால், நமது பிரதமரும் தற்போது விமானம் வாங்கும் செலவில் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்களை வீணடித்துள்ளார்.
இந்தோ-சீன எல்லையில் கடும் குளிரில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுவரும் நமது படையினருக்குத் தேவையான பாதுகாப்பு உடைகள், ஜாக்கெட்டுகளை இந்தப் பணத்தில் வாங்கி இருக்கலாம். ஏழை மக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்களை வாங்க இந்த நிதியை பயன்படுத்தியிருக்கலாம்.
நமக்காக தேச எல்லைகளில் நின்று போராடி வருகின்ற ராணுவ வீரர்களுக்கும், ஏழை மக்களுக்கும் நிதி இல்லை என்று அரசு கூறுகிறது. நாட்டு மக்கள், ராணுவ வீரர்கள் என்று யாரைப் பற்றியும் கவலைப்படாத பிரதமர் நரேந்திர மோடி, தன்னைப் பற்றி மட்டும் கவலை கொள்வது நியாயம் தானா?" என ராகுல் கேள்வி எழுப்பியுள்ளார்.