இந்திய அரசியல் சாசனம் ஏற்றுக்கொள்ளப்பட்டதன் 70ஆவது ஆண்டு தினம் இன்று கொண்டாடப்படுகிறது. 2015ஆம் ஆண்டு முதல் மோடி தலைமையிலான அரசு நவம்பர் 26ஆம் தேதியை அரசியல் சாசன தினமாக அறிவித்து ஆண்டுதோறும் கொண்டாடிவருகிறது. வரலாற்றுச் சிறப்புமிக்க தினமான இன்று நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி ஆகியோர் இந்த சிறப்பு அமர்வில் உரையாற்றினர். இந்த அமர்வை எதிர்க்கட்சிகள் புறக்கணித்தன. மத்தியில் மோடி தலைமையிலான பாஜக அரசு பொறுப்பேற்ற பின் நாட்டின் ஜனநாயக அமைப்புகள் தாக்குதலுக்கு உள்ளானதாகவும், நாட்டின் ஜனநாயகத்தை மோடி அரசு குழிதோண்டிப் புதைத்து விட்டதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டிவருகின்றன.
இதையடுத்து, அரசியல் சாசன தினத்தன்று தனது எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில் எதிர்க்கட்சிகள் ஒன்றுதிரண்டு நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அம்பேத்கர் சிலை முன்பு போராட்டம் நடத்தின.
இந்த போராட்டத்தில் காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஏனைய எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பங்கேற்றனர். போராட்டத்தில் காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி அரசியல் சாசன முகவுரையை வாசித்தார். மதிமுக பொதுச்செயலாளரும் மாநிலங்தளவை உறுப்பினருமான வைகோ, இந்திய அரசியல் சாசன முகவுரையை தமிழில் வாசித்தார்.
இதையும் படிங்க: நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவு: தப்பிக்குமா ஃபட்னாவிஸ் அரசு?