காங்கிரஸ் மூத்தத் தலைவரும், கேரளாவின் எதிர்க்கட்சி தலைவருமான ரமேஷ் சென்னிதாலா திங்கள்கிழமை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறும்போது, “நாட்டில் பொதுஅடைப்பு தொடங்கியதிலிருந்து பல்வேறு மாநிலங்களில் ஆயிரக்கணக்கான கேரள மாணவர்கள், பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் என பலர் சிக்கித் தவிக்கின்றனர். அவர்கள் சொந்த மாநிலத்துக்கு திரும்ப காத்திருக்கின்றனர்.
அவர்களில் நூற்றுக்கணக்கானவர்கள் நம் மாநிலத்தின் ஆறு நுழைவு புள்ளிகளில் சிக்கித் தவிக்கின்றனர். இந்த நிலையில் இந்திய ரயில்வே நாட்டின் பல்வேறு இடங்களிலிருந்து 366 க்கும் மேற்பட்ட ரயில்களை இயக்கவுள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் ஒரு ரயில் கூட கேரளாவுக்குள் வரவில்லை என்பது துரதிர்ஷ்டவசமானது.
இங்குள்ள விஜயன் நிர்வாகம் எவ்வளவு கடுமையானது என்பதை இது தெளிவாகக் காட்டுகிறது. இதற்கிடையில் ஆளும் கட்சியினர் அமெரிக்காவைச் சேர்ந்த மக்கள் தொடர்பு (பி.ஆர்.) மார்க்கெட்டிங் நிறுவனம் மீது கவனம் செலுத்துகின்றனர். மாநிலத்தில் நடக்கும் ஒரே விஷயம் இதுதான். மாறாக மாநில அரசிடம் எந்த செயல் திட்டமும் இல்லை. வரவிருக்கும் தேர்தல்களில் மட்டும் கவனம் செலுத்துகின்றனர்.
மக்கள் தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ள போது, விஜயன் தேர்தல் பரப்புரையில் கவனம் செலுத்துகிறார். இது கேரளத்தை ஆழமாக அறிந்தவர்களால் உணர முடியும்” என்றார். முன்னாள் அமைச்சர் எம்.கே. முன்னீர் கூறுகையில், “மாநிலத்தில் இரண்டு லட்சம் தனிமைப்படுத்துதல் முகாம் அமைத்துள்ளதாக கூறுகின்றனர். ஆனால் ஆயிரம் பேர் கூட இங்கு இல்லை. இதில் பல்வேறு குழப்பங்கள் இருக்கிறது” என்றார்.