டெல்லி: வேளாண் விளைபொருள் வர்த்தகம் மற்றும் வணிகம் (ஊக்குவித்தல் மற்றும் வசதி ஏற்படுத்துதல்) மசோதா 2020, விலை உத்தரவாதம் மற்றும் வேளாண் சேவைக்கான விவசாயிகள் (அதிகாரம் அளிப்பு மற்றும் பாதுகாப்பு) ஒப்பந்த மசோதா 2020, அத்தியாவசியப் பொருள்கள் (திருத்த) மசோதா 2020 ஆகிய மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், அவற்றைத் திரும்பப் பெற வலியுறுத்தியும் விவசாயிகள் சுமார் 20 நாள்களாகப் போராட்டம் நடத்திவருகின்றனர்.
பஞ்சாப், ஹரியானா போன்ற வடமாநில விவசாயிகள் தங்களது எதிர்ப்பை தீவிரப்படுத்தியுள்ளனர். மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோருடன் இதுவரை நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் அனைத்தும் தோல்வியையே சந்தித்துள்ளன.
இந்நிலையில், இவர்களது போராட்டத்திற்கு வலுசேர்க்கும் விதமாக நாடு முழுவதுமுள்ள விவசாயிகள் டெல்லியை நோக்கி திரண்டுவருகின்றனர். அமைச்சர்கள், அரசு அலுவலர்கள், விளையாட்டு வீரர்கள் எனப் பலரும் தங்களது பதவிகளையும், பதக்கங்களையும் துறந்து விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்துவருகின்றனர்.
இதற்கிடையில் மத்திய அமைச்சர் ஒருவர் விவசாயிகளை காலிஸ்தானிகள் எனவும் பிரிவினைவாதிகள் எனவும் விமர்சித்துள்ளார். இதற்குப் பதிலளித்துள்ள காங்கிரஸ் மூத்தத் தலைவர், "அமைச்சர் அவர்களே, யார் உண்மையில் பிரிவினைவாதி? ஒவ்வொரு குடிமகனையும் இரண்டு கோணங்களில் பார்க்கிறவர், சமுதாயத்தில் வெறுப்பை பரப்புபவர், கொள்கைகள் மூலம் சமூகத்தில் அச்ச உணர்வை ஏற்படுத்துபவர், கோட்சேவைப் புகழ்ந்து பேசுபவர். அவர்கள் எங்கள் விவசாயிகள் அல்ல" எனக் கூறியுள்ளார்.
முன்னதாக அமைச்சரின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்த காங்கிரஸ் எம்.பி. ப. சிதம்பரம், பிரிவினைவாதிகளாக இருந்தால் அவர்களிடம் ஏன் பேச்சுவார்த்தை மேற்கொள்ள வேண்டும் எனக் கேள்வி எழுப்பினார்.
இதையும் படிங்க: பிரிவினைவாதிங்கனு சொல்றீங்களே அப்போ ஏன் பேச்சுவார்த்தை நடத்துறீங்க? - சிதம்பரம்