மகாராஷ்டிரா முன்னாள் முதலமைச்சரும், காங்கிரஸ் மூத்தத் தலைவருமான அசோக் சவான், காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தியை டெல்லியில் இன்று சந்தித்துப்பேசினார்.
இந்தச் சந்திப்பு சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக நீடித்தது. இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த சவான், “மகாராஷ்டிராவில் மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்துவது தொடர்பாக கூட்டணி கட்சிகளுடன் பேசி முடிவெடுக்கப்படும்” என்றார்.
இது குறித்து அவர் மேலும் கூறும்போது, “மூன்று கட்சிகள் கூடி முடிவெடுப்பதே இறுதி முடிவாக இருக்கும். இவ்விவகாரம் தொடர்பாக முடிவெடுக்க ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் விரைவில் நடத்தப்படும்” என்றார்.
ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்தின் தேசியவாதம் குறித்த கருத்துக்கு பதிலளித்த சவான், “ஒட்டுமொத்த நாடே ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்துக்கு எதிராக உள்ளது. ஆர்.எஸ்.எஸ்., அதன் சித்தாந்தத்திற்கு எதிராக காங்கிரசின் போராட்டம் தொடரும்” என்றார்.
மகாராஷ்டிராவில் குடியுரிமை திருத்தச் சட்டம் (சி.ஏ.ஏ.), தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு (என்.பி.ஆர்.) ஆகியவை அமல்படுத்தப்படும் என்று மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தெரிவித்தார். எனினும் தேசிய குடிமக்கள் பதிவேட்டை அவர் அங்கீகரிக்கவில்லை. தாக்கரேவின் இந்த முடிவு, கூட்டணி கட்சிகளான தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளன.
இதையும் படிங்க: சிசிஏ போராட்டத்தில் கலந்துகொண்ட சிறுமிக்கு பிரியங்கா காந்தி பரிசு