தென்மேற்கு வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் 520 கி.மீ. தூரத்தில் உள்ளது. புயல் கரையைக் கடக்கும்போது 100- 110 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக கடலோர மாவட்டங்களில் கனமழை முதல் அதீத கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இந்நிலையில், புதுச்சேரியில் மேற்கொள்ளப்பட வேண்டிய நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுவருகிறது.
இதில், நிவர் புயலால் ஏற்படும் பாதிப்புகளைச் சரிசெய்வது, மக்களைப் பாதுகாப்பாகத் தங்கவைப்பது, கனமழை பெய்யும்பட்சத்தில் தாழ்வான பகுதிகளில் தேங்கும் நீரை வெளியேற்றுவது உள்ளிட்ட விஷயங்கள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுவருகிறது.
கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள அவசர கால செயல் மையத்தில் நடைபெறும் கூட்டத்தில் வருவாய்த் துறை அமைச்சர் ஷாஜகான், தலைமைச் செயலர் அஸ்வனி குமார், காவல் துறைத் தலைவர் பாலாஜி ஸ்ரீவத்சவா, சுகாதாரத் துறை, உள்ளாட்சித் துறை, வருவாய்த் துறை, பொதுப்பணித் துறைகளைச் சார்ந்த அலுவலர்கள் பங்கேற்றுள்ளனர்.