டெல்லி : பிகார் சட்டப்பேரவை தேர்தலுக்கு பின்னர் நிதிஷ் குமார் தான் அம்மாநிலத்தின் முதலமைச்சராக இருப்பார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வலியுறுத்தியுள்ளார். மேலும், சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி மூன்றில் இரண்டு பங்கு இடங்களில் வெற்றி பெறும் எனத் தெரிவித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில், பிகார் மாநில தேர்தலில் பாஜக அதிக இடங்களில் வெற்றி பெற்றால், முதலமைச்சர் பதவிக்கு உரிமை கோருமா என கேட்கப்பட்ட போது, இதில் மாற்று கருத்துக்கே இடம் இல்லை. நிதிஷ் குமார் தான் அடுத்த முதலமைச்சர். இது குறித்து நாங்கள் வெளிப்படையாக அறிவித்துள்ளோம்.
தேர்தலுக்கு பின் பிகார் மக்களுக்கு, மாநிலத்தில் நிதிஷ் குமார் தலைமையிலான ஆட்சியும், மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சி என இரட்டை இயந்திர ஆட்சி கிடைக்கும் என்றார்.
பிகாரில் ஆளும் கூட்டணியில் இருந்து லோக் ஜனசக்தி கட்சி விலகுவது குறித்து பேசிய அமித் ஷா, அந்த கட்சிக்கு போதுமான இடங்கள் ஒதுக்கப்பட்ட போதும், அவர்கள் கூட்டணியில் இருந்து விலகியுள்ளனர். இது அவர்களின் முடிவு என தெரிவித்தார்.
பிகாரில், 243 தொகுதிகளுக்கான சட்டப்பேரவைத் தேர்தல், அக்டோபர் 28, நவம்பர், 3 மற்றும் 7 ஆகிய தேதிகளில் மூன்று கட்டங்களாக நடைபெற உள்ளது. நவம்பர் 10ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
இதையும் படிங்க : மத்திய உள்துறை செயலர் அஜய் குமார் பல்லாவின் பதவிக்காலம் நீட்டிப்பு