சிவசேனாவின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவில் வெளியான தலையங்கத்தில், “நாட்டில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி தாமதமாக கிடைக்க சட்ட அமைப்புகளில் உள்ள ஓட்டைகளே காரணம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிர்பயா வழக்கு
அதில் மேலும், “நிர்பயா வழக்கில் நீதி தொடர்ந்து தாமதமாகிறது. குற்றம் சாட்டப்பட்டவர்களின் தூக்குத் தண்டனையை நாட்டின் உயர் நீதிமன்றம் உறுதிசெய்தபோது, குற்றவாளிகளுக்கு தண்டனையை அமல்படுத்துவதில் தாமதம் ஏற்படக்கூடாது.
அவர்களின் கருணை மனுக்களை குடியரசுத் தலைவர் நிராகரித்தார். அவர்களுக்கு மரண உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தூக்கிலிடப்படும் தேதி மற்றும் நேரம் இறுதி செய்யப்பட்டன. எனினும் அவர்கள் தூக்கு கயிற்றில் இருந்து தப்புகின்றனர்.
தாமதம்
தற்போதுள்ள சட்டங்களில் உள்ள ஓட்டைகள் மரண தண்டனையை அமல்படுத்தும் வழியில் வரக்கூடாது. இதுபோன்ற துரதிர்ஷ்டவசமான முன்னேற்றங்கள் நடக்கக்கூடாது. நிர்பயா வழக்கின் குற்றவாளிகள் தூக்கிலிடப்படுவதில் தாமதம் ஏற்பட்டுவருகிறது.
இருப்பினும் மக்கள் நீதித்துறை மீதான நம்பிக்கையை இழக்க மாட்டார்கள் என்று நாங்கள் நம்புகிறோம். நீதி வழங்குவதில் தாமதம் ஏற்பட்டால், ஆந்திரா காட்டிய வழியில் செயல்பட வேண்டும். திக்ஷா பாலியல் வன்புணர்வு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஹைதராபாத் காவலர்களால் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
திக்ஷா சட்டம்
இதுபோன்ற நடைமுறையை வேறு இடங்களிலும் செயல்படுத்தப்பட வேண்டும் என்று மக்கள் நினைக்கிறார்கள். ஆகவே நிர்பயா வழக்கில் துரதிர்ஷ்டவசமாக நீதி மீண்டும் தாமதமாகக் கூடாது” என கூறப்பட்டுள்ளது.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை விரைவாகக் கண்டறிந்து மரண தண்டனை வழங்க முற்படும் திஷா சட்டத்தை ஆந்திர அரசு சமீபத்தில் உருவாக்கியது. கடந்தாண்டு நவம்பரில் தெலங்கானாவில் கொடூரமாக பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட கால்நடை மருத்துவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இந்தச் சட்டம் இயற்றப்பட்டது.
புதிய உத்தரவு
பாலியல் குற்றங்கள் தொடர்பான வழக்குகளில் ஏழு வேலை நாட்களுக்குள் விசாரணையை முடிக்கவும், குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்த நாளிலிருந்து 14 வேலை நாட்களுக்குள் விசாரணையை முடிக்கவும் இச்சட்டம் கட்டளையிடுகிறது.
நிர்பயா பாலியல் வழக்கில் தண்டனை கைதிகள் நால்வருக்கும் மூன்று முறை தூக்கு தண்டனை தேதி அறிவிக்கப்பட்டு பின்னர் நிறுத்தப்பட்டது. அவர்கள் நால்வரையும் வருகிற 20ஆம் தேதி அதிகாலை 5.30 மணிக்கு தூக்கிலிட புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: நிர்பயா வழக்கில் நால்வருக்கும் தூக்கு தேதி அறிவிப்பு