காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பச்சையப்பன் (37), சென்னையைச் சேர்ந்த ராஜேஷ் (34), சேலத்தைச் சேர்ந்த அன்பரசன் (27), அப்துல் ரகுமான் (44), லியாகத் அலி (29), கடலூரைச் சேர்ந்த காஜா மொகைதீன், கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த முகமது கனீஃப் கான் (29), இம்ரான் கான்(32), முகமது சையத் (24), எஜாஸ் பாஷா (46), ஹுசைன் ஷரீஃப் (33) முகமது பாஷா (48) ஆகிய 12 பேர் மீது தேசிய புலனாய்வு முகமை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
இவர்கள் மீது 120பி, 201, 465,468, 471, 34 ஆகிய இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகளின் கீழும், படைக்கலச் சட்டப்பிரிவுகள் 17,18,18பி, 19, 38 ஆகியவற்றின் கீழும், சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் 40இன் கீழும் இவர்கள் 12 பேர் மீது தேசியப் புலனாய்வு முகமை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சோதனைச் சாவடியில் ஜனவரி 8ஆம் தேதி காவல் துணை ஆய்வாளர் வில்சன் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
இது தொடர்பாக கர்நாடக மாநிலம் உடுப்பி ரயில் நிலையத்தில் அப்துல் ஷமிம், தவுபிக் ஆகிய 2 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர். இவர்கள் இருவரும் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள். இவர்களுடன் யாரெல்லாம் தொடர்பில் இருந்தார்கள்? என்பது குறித்து தமிழ்நாடு ‘கியூ’ பிரிவு காவல் துறையினர் விசாரித்தனர்.
காவலர் கொலை வழக்கில் திருப்பம்: பயங்கரவாதிகளுடன் தொடர்பா?
அப்போது காஞ்சிபுரத்தில் இருந்து இவர்களுக்கு ‘சிம் கார்டு’ சப்ளை செய்யப்பட்டது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து காஞ்சிபுரத்தில் ‘கியூ’ பிரிவு காவல் துறையினர் 3 மொபைல் கடைகளில் சோதனை நடத்தினர்.
இந்த கடைகளில் இருந்து போலி முகவரி மூலம் பயங்கரவாதிகள் இருவருக்கும் ஏராளமான சிம் கார்டுகள் சப்ளை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையொட்டி அந்த 3 கடைகளின் உரிமையாளர்களையும், கடையில் பணியாற்றும் 3 ஊழியர்களையும் ‘கியூ’ பிரிவு காவல் துறையினர் விசாரணைக்காக சென்னை அழைத்து வந்து தீவிர விசாரணை நடந்தினர்.
வில்சன் கொலை வழக்கு': தேசிய புலனாய்வு முகமையிடம் ஒப்படைப்பு
ஏற்கனவே சிம் கார்டு சப்ளை செய்ததாக பெங்களூருவைச் சேர்ந்த 3 பேர் மற்றும் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பச்சையப்பன், ராஜேஷ், சேலத்தைச் சேர்ந்த அப்துல் ரகுமான், அன்பரசன் ஆகிய 7 பேரை ‘கியூ’ பிரிவு காவல் துறையினர் கைது செய்தனர். இதனையடுத்து பெங்களூரு ஜெயநகர் பகுதியில் மெகபூப் பாஷா (வயது 45), முகமது மன்சூர் கான் ஆகிய 2 பயங்கரவாதிகளை பெங்களூரு மத்திய குற்றப் பிரிவு காவல் துறையினர் கைது செய்த நிலையில், தமிழ்நாடு ‘கியூ’ பிரிவு காவல் துறையினரும், கர்நாடக காவல் துறையினரும் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
இச்சூழலில் காவல் துணை ஆய்வாளர் வில்சனை சுட்டுக்கொன்ற பயங்கரவாதிகள் அப்துல் ஷமிம், தவுபிக் ஆகியோருக்கு உதவிகள் செய்து அடைக்கலம் கொடுத்ததாக கூறப்படும் உசேன் செரீப் (36) என்பவர் பெங்களூருவில் பதுங்கி இருப்பதாக தமிழ்நாடு ‘கியூ’ பிரிவு காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அவர்கள் பெங்களூரு சென்று உசேன் செரீப்பை கைது செய்தனர். அவர் உடனடியாக சென்னை அழைத்து வரப்பட்டார். அவரிடம் தீவிர விசாரணை நடத்திய பிறகு, எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைத்து புழல் மத்திய சிறையில் அடைத்தனர்.
வில்சன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களுக்கு நீதிமன்ற காவல்
மேலும் இவர்கள் புதிய மென்பொருள் (சாப்ட்வேர்) ஒன்றை உருவாக்கி அதன்மூலம் தகவல்களை பரிமாற்றம் செய்து வந்துள்ளனர். அந்த புதிய மென்பொருளில் உள்ள தகவல் பரிமாற்றத்தை தேசிய புலனாய்வு முகமையால் (என்.ஐ.ஏ.) கூட கண்டுபிடிக்க முடியாது என்றும், ஒருவேளை அதை கண்டுபிடிக்க முற்பட்டால், அதில் உள்ள தகவல்கள் தானாக அழிந்துவிடும் வகையில் அந்த மென்பொருளை உருவாக்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது.
சமீபகாலமாக பயங்கரவாத அமைப்புகளைச் சேர்ந்த 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குஜராத், டெல்லி, கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் இவர்கள் பிடிபட்டது குறிப்பிடத்தக்கது. பயங்கரவாதிகள் வேட்டை தொடர்ந்து நடந்து வருகிறது.
பயங்கரவாதிகள் அமைப்புகள் தொடர்பாக தமிழ்நாடு ‘கியூ’ பிரிவு காவல் துறையினர் பதிவு செய்துள்ள வழக்குகளும், எஸ்.ஐ வில்சன் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கும் தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்படும் என்றும், இதற்காக பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.