இந்திய, நேபாள எல்லையில் அமைந்துள்ள லிம்பியதுரா, காலாபாணி, லிபுலேக் ஆகிய பகுதிகள் இந்தியாவுக்குச் சொந்தமில்லை என நேபாள அரசு கூறிவருகிறது. ஆனால், இந்தப் பகுதிகள், உத்தரகாண்ட் மாநிலத்தின் ஒருங்கிணைந்த பகுதிகள் என இந்தியா கூறுகிறது.
இந்நிலையில், லிம்பியதுரா, காலாபாணி, லிபுலேக் ஆகிய மூன்று பகுதிகளைச் சேர்ந்து நாட்டின் புதிய வரைபடத்தை தயார் செய்து நேபாள அரசு வெளியிட்டுள்ளது. இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
"1962ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தோ சீனா போருக்கு முன்னர் இந்தப் பகுதிகள் நோபாள அரசின் கட்டுப்பாட்டில் இருந்தது. போரின்போது நேபாள அரசிடம் தற்காலிக அனுமதிபெற்று இந்திய அரசு அப்பகுதிகளில் படைகளை நிறுத்தியது. அன்று நிறுத்திய படைகள் இதுவரை திரும்பப் பெறவில்லை" என நேபாள அரசு தரப்பில் கூறப்படுகிறது.
இதற்கிடையே, திபெத்துக்கு நடந்த சம்பவங்களை கருத்தில்கொண்டு நேபாள அரசு தனது நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் எனத் தெரிவித்த உ.பி. முதலமைச்சரின் கருத்துக்கு நேபாள நாட்டின் பிரதமர் கண்டனத்தைத் தெரிவித்தார்.
மேலும், இந்தியா மற்றும் நேபாளத்தின் பிரபல நபர்கள் குழு தயாரித்த கூட்டு அறிக்கையைப் பெற இந்திய அரசு விரும்பவில்லை. காத்மண்டு அறிக்கையைப் பெறத் தயாராக உள்ளது. ஆனால் இரு அரசாங்கங்களும் அதைப் பெறாவிட்டால் அது அர்த்தமற்றது என்று அவர் கூறினார்.
அதுமட்டுமின்றி, இந்தியாவுடனான பேச்சுவார்த்தைக்கு நாங்கள் தயாராக உள்ளோம். ஆனால், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தயாரிக்கப்பட்ட அறிக்கையைப் பெற்று பேச்சுவார்த்தை நடத்த இந்திய அரசு எந்த ஆர்வமும் காட்டவில்லை" என்றார்.