வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் தீவிரமாக மாறி ஆந்திராவின் வடக்கு கடலோர பகுதியான காக்கிநாடாவில் அக்டோபர் 13ஆம் தேதி கரையை கடந்தது. அன்று காலை 6:30 மணி முதல் 7:30 மணி வரையிலான காலகட்டத்தில், 75 கிலோ மீட்டர் வேகத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடந்தது. இதனைத் தொடர்ந்து, ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் பலத்த கனமழை பெய்துவருகிறது.
இதன் காரணமாக தெலங்கானாவில் மட்டும் இதுவரை 15 பேர் உயிரிழந்துள்ளனர். பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மிதந்துவருகின்றன. பல இடங்களில் வீடுகள் இடிந்து விழுந்துள்ளன. இதற்கிடையே, தனியார் நிறுவனங்கள், அலுவலகங்கள் ஆகியவற்றுக்கு அக்டோபர் 15, 16 ஆகிய தேதிகளில் விடுமுறை அறிவித்து மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அடுத்த இரண்டு நாள்களுக்கு கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், ஹைதராபாத் மற்றும் தெலங்கானாவின் மற்ற பகுதிகளில் மீட்புப் பணிகளை மேற்கொள்ளும் வகையில், தேசிய மீட்பு படையைச் சேர்ந்த கூடுதல் வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். உள்ளூர் நிர்வாகத்திற்கு உதவும் வகையில் ஏற்கெனவே நான்கு குழுக்கள் அங்கு அனுப்பப்பட்டுள்ளன.
இதுகுறித்து தேசிய பேரிடர் மீட்புப் படையின் இயக்குநர் பிரதான் கூறுகையில், "அனைத்து விதமான நிலைமையை சமாளிக்கவும் நாங்கள் தயாராக இருக்கிறோம். ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா ஆகிய மாநிலங்களில் ஏற்கெனவே எங்கள் குழு உள்ளூர் நிர்வாகத்திற்கு உதவி செய்து வருகிறது. நிலைமையின் தேவை கருதி கூடுதலான வீரர்கள் குவிக்கப்படுவர். பெரும்பாலான இடங்களில் 300 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. இரண்டு இடங்களில் சுவர் இடிந்து விழுந்ததால், 7 முதல் 8 பேர் உயிரிழந்திருக்கலாம். மின்சாரம் தாக்கி இருவர் உயிரிழந்துள்ளனர். இருப்பினும் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது" என்றார்.
இதையும் படிங்க: வரலாறு காணாத மழை - சூறையாடப்பட்ட ஹைதராபாத்!