புதுச்சேரி அரசு பொதுப்பணித் துறை சார்பில் தேங்காய்த்திட்டு மீன்பிடித் துறைமுகத்தில் உள்ள சாலைகள், கட்டடங்களை பழுதுபார்த்தல் மற்றும் மேம்படுத்துவதற்காக சுமார் 15.63 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திட்டப் பணி தொடக்க விழா இன்று நடைபெற்றது.
தேங்காய்த்திட்டு துறைமுக வளாகத்தில் நடைபெற்ற இவ்விழாவில் முதலமைச்சர் நாராயணசாமி, பொதுப்பணித் துறை அமைச்சர் நமச்சிவாயம், சுகாதாரத் துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
அதன்பிறகு பேசிய முதலமைச்சர் நாராயணசாமி, ”கடந்த காலங்களில் என்.ஆர். காங்கிரஸ் ஆட்சி மீனவ சமுதாய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை செய்யாமல் புறக்கணித்துவந்தனர். ஆனால் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த மூன்று ஆண்டு காலமாக மீனவர்கள் பிரச்னையை முன்னெடுத்து வைத்து காங்கிரஸ் அரசு செய்துவருகிறது. குறிப்பாக இலங்கை கடற்படையினர் நமது மீனவர்களின் படகுகளை பறிமுதல் செய்து அவர்களை கைது செய்து அழைத்து செல்லும்போது காங்கிரஸ் அரசு தலையிட்டு உடனடியாக அவர்களை விடுவித்துள்ளது. மீனவர்கள் பாதுகாப்பிற்காக காப்பீட்டுத் திட்டத்தை காங்கிரஸ் அரசு நடைமுறைப்படுத்தி உள்ளது” என்றார்.
இதனையடுத்து, மீனவர்களுக்கு அரசே படகு வாங்கி கொடுத்தால் நன்றாக இருக்கும் என்று மீனவர் ஒருவர் கூட்டத்தில் கேட்டதற்கு பதிலளித்த முதலமைச்சர், படகும் வாங்கித் தருகிறேன், மீனும் பிடித்துத் தருகிறேன் என்றார். மேலும் பேசிய அவர், அரசு என்பது ஓரளவுக்குத்தான் செய்ய முடியும் அதற்காக அனைத்தையுமே அரசு செய்துவிட முடியாது என்பதனை மீனவர்கள் நினைவில் கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.