இதுதொடர்பாக ட்வீட் செய்துள்ள சந்திரபாபு நாயுடு, ஊரடங்கின் காரணமாக, இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், வேலையின்றி பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள மக்களால் எவ்வாறு கூடுதலாகச் சுமத்தப்படும், மின் கட்டணத்தைச் செலுத்த முடியும் என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், கடந்த மூன்று மாதங்களுக்கான மின் கட்டணத்தை ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான அரசு தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
மின்சாரக் கட்டணத்தை குறைப்பதாக, ஒய்எஸ்ஆர்சி கட்சி தனது தேர்தல் வாக்குறுதியில் கூறியிருந்ததை நினைவுபடுத்திய நாயுடு, மாநில அரசு மக்களின் நம்பகத்தன்மையை இழந்துவிட்டதாகப் புகார் கூறினார்.
வீடியோ கான்பிரன்ஸ் மூலம் பத்திரிகையாளர் சந்திப்பில் உரையாற்றிய சந்திரபாபு நாயுடு, ஆண்டு சராசரி நுகர்வு அடிப்படையில் ஏ, பி மற்றும் சி குழுக்களாக நுகர்வோர் வகைப்படுத்தலை, பழைய முறைக்கு மாற்றுமாறு மாநில அரசிற்கு வேண்டுகோள் விடுத்தார். இதன்மூலம் பொதுமக்களின் சுமை குறையும் என்றும் கூறினார்.
தெலுங்கு தேசம் கட்சி தலைமையிலான அரசு, தனது ஆட்சிக் காலத்தில் மின் கட்டணத்தை உயர்த்தவில்லை என்றும், மக்கள் மீது எந்தவிதமான மறைமுக சுமையையும் சுமத்தவில்லை என்றும் நாயுடு குறிப்பிட்டார். ஊரடங்கால், கடந்த இரண்டு மாதங்களில் வேலை மற்றும் வருமானம் இல்லாததால் பொது மக்கள் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே நேரத்தில், வீடு திரும்பும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வழியில் சொல்லமுடியாத கஷ்டங்களை எதிர்கொள்கின்றனர்.
இத்தகைய நேரத்தில், குடிசையில் வசிக்கும் ஒரு மூதாட்டிக்கு மார்ச் மாதம் ரூ. 200 ஆக இருந்த மின் கட்டணம் தற்போது மூன்றாயிரத்து 424 ரூபாயாக வந்துள்ளது. மேலும், பல மாதங்களாக செயல்பாட்டில் இல்லாத ஒரு விடுதிக்கு, மார்ச் மாதத்தில் ரூ.150 ஆக இருந்த கட்டணம் தற்போது ரூ. 10,685ஆக உயர்ந்துள்ளதாக அவர் குற்றம்சாட்டினார்.
மாநில அமைச்சர்கள், பொதுமக்கள் குறித்த விழிப்புணர்வு இல்லாமல் பேசுவதாகக் குற்றம் சாட்டிய நாயுடு, நுகர்வோரின் குழு வகைப்பாடு என்பது மக்கள்தொகையின் பல்வேறு பிரிவுகளால் மின் பயன்பாட்டின் உயர்வு மற்றும் வீழ்ச்சிக்கு ஏற்ப கட்டணச் சுமையை பகுத்தாய்வு செய்வதை நோக்கமாகக் கொண்டது என்று கூறினார்.
மக்கள் பிரச்னைகளுக்கு பதிலளிப்பதற்குப் பதிலாக, ஆளும் கட்சி ஜனநாயக விதிமுறைகள், மரபுகளை மதிக்காமல் எதிர் தாக்குதல்களை நடத்துவதும், தெலுங்கு தேசம் கட்சி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்கள் மீது குற்றச்சாட்டுகளை சுமத்துவதும் பழக்கமாகிவிட்டது என்றும் சந்திரபாபு நாயுடு விமர்சித்துள்ளார். இந்த அரசாங்கத்தின் அநியாய, மோசமான வழிமுறைகளை அம்பலப்படுத்த பொதுமக்கள் அதிகரிக்கப்பட்ட மின் கட்டணத்தை, சமூக ஊடகங்களில் வெளியிட வேண்டும் என்றும் சந்திரபாபு நாயுடு கேட்டுக்கொண்டார்.
இதையும் படிங்க: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மீது எஃப்.ஐ.ஆர் பதிவு