கேரளாவின் பெரியாறு மற்றும் முல்லை நதிகளில் இருந்து அதிகப்படியான தண்ணீரை தமிழ்நாட்டின் நீர் பற்றாக்குறை மாவட்டங்களுக்கு திருப்புவதற்காக கட்டப்பட்ட இந்த அணை 1895 அக்டோபர் 10 அன்று அப்போதைய மெட்ராஸ் ஆளுநரால் திறக்கப்பட்டது.
தமிழ்நாடு - கேரளா மாநிலங்களுக்கு இடையேயான நீர் பகிர்வு ஒப்பந்தம் 874 வருடங்களுக்கு செல்லுபடியாகும். இதனிடையே முல்லை பெரியார் அணை விவகாரம் தொடர்பாக இரு மாநிலங்களுக்கு இடையே பல்வேறு முறை பிரச்னைகள் எழுந்துள்ளது.
சிவகிரி மலைப்பகுதியில் உள்ள சொக்கம்பட்டியில் தோன்றிய பெரியாறு நதி 48 கிலோமீட்டர் கடந்து மணலாரில் வழியாக முல்லையர் நதியுடன் கோட்டமாலாவிலிருந்து கீழே பாய்கிறது.
இங்கிருந்து, இந்த இரண்டு ஆறுகளும் ஒன்றாகப் பாய்கின்றன. அதற்கு முல்லைப் பெரியாறு நதி என்று பெயர். இந்த ஆற்றின் குறுக்கே வரலாற்று முல்லைப்பெரியாறு அணை ஒரு நூற்றாண்டுக்கு முன்பு கட்டப்பட்டுள்ளது.
1882ஆம் ஆண்டில், திருத்தப்பட்ட திட்டம் மற்றும் முன்மொழிவு ஸ்காட்டிஷ் மேஜர் ஜான் பென்னிகுயிக் மற்றும் ஆர் ஸ்மித் ஆகியோரால் சமர்ப்பிக்கப்பட்டது.
1884 ஆம் ஆண்டில், திருவிதாங்கூர் மாநிலத்துடன் கலந்துரையாடல்கள் தொடங்கியது, இறுதியாக 1886 இல் ஒரு உடன்படிக்கைக்கு வழிவகுத்தது.
இந்த ஒப்பந்தம் மெட்ராஸ் மாகாணத்திற்கு, பெரியாறு ஆற்றின் குறுக்கே ஒரு அணை கட்ட அனுமதித்தது. இந்த ஒப்பந்தத்தில் மெட்ராஸ் நிர்வாகத்திற்கு எந்தவொரு நிலமும் இருக்காது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அப்போதைய திருவிதாங்கூர் ஆட்சியாளரான விசாகம் திருநால் ராமவர்மாவின் உத்தரவுப்படி, ஆற்றின் 155 அடி உயரத்தில் அமைந்துள்ள 8 ஆயிரம் ஏக்கர் நிலமும், அணை கட்டுமானத்திற்காக மேலும் 100 ஏக்கர் நிலமும் குத்தகைக்குவிடப்பட்டது.
முல்லைப் பெரியாற்றில் இருந்து கிட்டத்தட்ட 14 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தேக்கடியில் 2 கிலோமீட்டர் நீளமுள்ள சுரங்கப்பாதை வழியாக முல்லைப்பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் தமிழ்நாட்டிற்கு பாய்கிறது. இந்த நீர் தேனி, மதுரை, திண்டுக்கல், இராமநாதபுரம் மற்றும் சிவகங்கை ஆகிய மாவட்டங்களுக்கு நீர்ப்பாசனம் செய்ய பயன்படுத்தப்பட்டு வருகிறது.
முல்லைப்பெரியாறு நீர் குடிநீர் தேவைகளுக்காகவும், மின்சாரம் தயாரிக்கவும் பயன்படுத்தப்படுகிறது. ஆரம்பத்தில், பெரிய குளங்களை தோண்டுவதன் மூலம் தண்ணீர் சேமிக்கப்பட்டு வந்தது.
பின்னர் 1959 ஆம் ஆண்டில், முல்லைப்பெரியாறில் இருந்து தண்ணீரை சேமிக்க தமிழ்நாட்டின் வைகை ஆற்றின் குறுக்கே மற்றொரு அணை கட்டப்பட்டது.
தற்போது, முல்லைப்பெரியாறில் இருந்து வரும் நீர் இந்த அணையில் சேமிக்கப்பட்டு, பின்னர் தேவைப்படும் போது, பிராந்தியத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு வெளியிடப்படுகிறது.
1979ஆம் ஆண்டில் அணையில் ஆபத்தான அளவிலான கசிவு காணப்பட்டபோது, தமிழ்நாடு மற்றும் கேரளா இடையேயான சர்ச்சைகள் தொடங்கியது.
அப்போதைய பீர்மேடு எம்.எல்.ஏ. சி ஏ குரியன், அணையை புதுப்பிக்கக்கோரி வன்டி பெரியாறில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டார். இதைத் தொடர்ந்து, 1979 நவம்பர் 25 ஆம் தேதி, மத்திய நீர் ஆணைய உறுப்பினர்கள் அணையை ஆய்வு செய்தனர்.
நீர்மட்டத்தை 136 அடியாகக் குறைக்கவும், கட்டமைப்பை வலுப்படுத்த குறுகிய கால மற்றும் நீண்ட கால நடவடிக்கைகளை எடுக்கவும் ஆணையம் உத்தரவிட்டது. இதனடிப்படையில், அணையின் கசிவு பாதைகளின் எண்ணிக்கை 10 முதல் 13 ஆக உயர்த்தப்பட்டது.
அணையை வலுப்படுத்தும் பணிகள் முடிந்ததும், அணையின் நீர்மட்டத்தை 152 அடிக்கு உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையை தமிழ்நாடு கோரியது. பாதுகாப்பு காரணங்களை சுட்டிக்காட்டி தமிழ்நாட்டின் இந்த கோரிக்கையை கேரளா மறுத்ததால், இந்த வழக்கு நீதிமன்றத்திற்கு சென்றது.
இந்த வழக்கு ஆரம்பத்தில் அந்தந்த மாநிலங்களின் உயர் நீதிமன்றங்களில் தனித்தனியாக இருந்தது. பின்னர், அணை தொடர்பான அனைத்து வழக்குகளையும் உச்சநீதிமன்றத்திற்கு மாற்றக் கோரி தமிழ்நாடு உச்ச நீதிமன்றத்தை நாடியது.
முல்லை பெரியாறு அணை 125 வயதை எட்டியுள்ள நிலையில், கேரளாவிற்கான பாதுகாப்பு மற்றும் தமிழ்நாட்டிற்கான நீர் என்ற முழக்கம் இன்றும் வலுவாக எதிரொலிக்கிறது.
இதையும் படிங்க: மகிழ்ச்சியில் விவசாயிகள்: முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் மேலும் 2 அடி உயர்வு