பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாட்கள் பயணமாக உத்தரகாண்ட் மாநிலம் கேதார்நாத்திற்கு நேற்று சென்றார். பின்னர் அங்குள்ள கோயில்களில் வழிபாடு செய்த மோடி, பின்னர் அங்குள்ள பனிக்குகையில் விடிய விடிய தியானம் மேற்கொண்டார். கோயிலுக்கு செல்லும்போது எதற்காக கேமராவுடன் செல்கிறார் மோடி என்று சமூக வலைதளங்களில் பல்வேறு விதமான விமர்சனங்களும் எழுந்தன. இந்த தியானத்தை கலாய்த்து மீம்ஸ் போட்டு நெட்டிசன்கள் பதிவிட்டனர்.
இதனையடுத்து, இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த மோடி, தனக்கும் கேதர்நாத்திற்கும் ஒரு உணர்வுப்பூர்வமான உறவு இருந்து வருவதாக தெரிவித்தார். அதைத் தொடர்ந்து மோடியின் இந்த பயணம் குறித்து தொடர்ந்து சமூக வலைதளங்களில் செய்தி பரப்பப்படுவது தேர்தல் நடத்தை விதிமீறல்கள் என்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் சார்பில் புகார் அளிக்கப்பட்டது.
இந்நிலையில், பிரதமர் மோடி தங்கியிருந்த குகை குறித்து புதிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது. அதன்படி தனியார் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டியளித்த நேரு மலையேறுதல் பயிற்சி நிறுவனத்தின் அலுவலர் கூறியதாவது, கடல் மட்டத்தில் இருந்து 12 ஆயிரம் அடி உயரத்தில் அமைந்துள்ள கேதார்நாத் கோயிலில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் குகை அமைந்துள்ளது.
இந்த குகையில் 2018ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வந்த பாறைகளை உடைக்கும் பணி நிறைவடைந்ததையடுத்து பின்னர் இந்த குகை மூடப்பட்டது. அதைத் தொடர்ந்து பிரதமரின் வருகைக்கு சில நாட்களுக்கு முன் தண்ணீர், மின்சாரம், கழிப்பறை, ஒரு ஜன்னல், படுக்கை உள்ளிட்ட பல்வேறு வசதிகளும் இந்த குகையில் செய்யப்பட்டுள்ளது.
பத்து அடி உயரம் கொண்ட இந்த குகையில் பிரதமரின் வருகையை முன்னிட்டு சிசிடிவி கண்காணிப்பு கேமிரா வசதியும் செய்யப்பட்டது. அது தவிர இந்த குகையின் வெளியில் இருந்து பாதுகாவலர் ஒருவர் மூலமாக சிசிடிவி பதிவுகள் கண்காணிக்கப்பட்டது. இந்த குகையில் சிறப்பு அம்சம் என்னவென்றால், இந்த குகையில் இருந்து பார்த்தால் நேரடியாக கேதார்நாத் கோயிலை தெளிவாக பார்க்க முடியும்.
மேலும், கேதர்நாத் கோயில் மதகுரு ஒருவர் கூறுகையில், பிரதமர் இங்கு வந்து தியானம் செய்தது, நாட்டில் உள்ள பல லட்சக்கணக்கான மக்கள் இங்கு வருவார்கள் என்று தெரிவித்தார்.