கோவிட் 19 தொற்று தற்போது உலகையே அச்சுறுத்திவருகிறது. இதுவரை உலகில் 16 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மூன்றரை லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் கரோனாவின் தாக்கம் தற்போது நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இந்தியாவில் வைரஸ் தொற்றால் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 500ஐ நெருங்குகிறது. மேலும், இந்த தொற்றால் இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்கள் முற்றிலும் முடக்கப்பட்டுள்ளன. அதன்படி, பொதுப்போக்குவரத்து இயங்காது. மக்கள் வீடுகளிலேயே முடங்கிக் கிடக்கின்றனர். இதன் காரணமாக நாடு முழுவதுமுள்ள அமைப்பு சாரா தொழிலாளர்களின் வருமானம் முற்றிலுமாக முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதனால் பொதுமக்களிடையே பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்தச் சூழ்நிலையில், கோவிட்-19 தொற்றின் தடுப்பு நடவடிக்கை குறித்து இன்று இரவு 8 மணிக்கு நாட்டு மக்களிடையே உரையாற்றவுள்ளதாக பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: கரோனா தொற்றை எதிர்த்துப் போராட தொழிலதிபர்கள் உதவ வேண்டும்