ஜார்கண்டைச் சேர்ந்த தொழிலாளர்கள் மைசூருவில் வேலை செய்தனர். இந்நிலையில், ஊரடங்கு அவர்களின் வேலையுடன் சேர்த்து வருமானத்தையும் நிறுத்தியது. சொந்த ஊருக்குச் சென்று ஒருவேளை உணவு உண்ண எத்தனித்த அவர்களுக்கு ஷ்ராமிக் சிறப்பு ரயில்கள் இயக்கம் புத்துயிர் அளித்தது.
பெங்களூரு ரயில் நிலையத்திற்கு கால்நடையாகவே 15 தொழிலாளர்கள் வந்தனர். ஆனால், மேற்கொண்டு என்ன செய்வதென்று புரியாமல், கப்பன் பார்க் காவல் நிலையத்திற்குச் சென்று நிலைமையை விளக்கியுள்ளனர்.
குடிபெயர் தொழிலாளர்களின் அவலநிலையைக் கண்ட மத்திய மண்டல காவல் துணை ஆணையர் சேத்தன் சிங் ரத்தோர் உடனடியாக அவர்களுக்கு மதிய உணவு ஏற்பாடு செய்தார்.
130 கி.மீ. நடந்துவந்த களைத்த தொழிலாளர்கள் கூறுகையில், ஊரடங்கிற்குப் பிறகு முதலாளியும் எங்களைக் கண்டுகொள்ளவில்லை. இந்த இரண்டு நாள்களில் பல மைல்கள் நடந்து பெங்களூரு ரயில் நிலையத்திற்கு வந்தோம்.
இந்த நாள்களில் ஒரே ஒரு பிஸ்கெட்தான் எங்களின் உணவு. ஷ்ராமிக் சிறப்பு ரயிலுக்கு விண்ணப்பிக்கக்கூட எங்களுக்குத் தெரியாது. எங்களுடைய சொந்த ஊருக்கு அனுப்பிவிடுங்கள்” என இறைஞ்சுகின்றனர்.
இதையும் படிங்க: கைக்குழந்தைகளுடன் 1,000 கி.மீ., நடைபயணம்...! உதவிக்கரம் நீட்டிய ஆந்திர காவல்துறை...!