கரோனா வைரஸ் பரவல் குறித்து மாநிலம் தோறும் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டு, மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
அப்படியான குழு ஒன்று, மேற்கு வங்க மாநிலத்தின் கல நிலவரம் குறித்து ஆய்வு மேற்கொள்வதற்காக அங்கு சென்றுள்ளது. ஆனால், அம்மாநில அரசு அதிகாரிகளும், நிர்வாக அலுவலர்களும் அக்குழுவுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்தக் குற்றச்சாட்டுகளை எழுப்பியுள்ள அக்குழுவின் தலைவர் அபூர்வா சந்திரா, மேற்கு வங்க தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளை தாம் சந்தித்ததாகவும், ஆனால் அவர்கள் முழு ஒத்துழைப்பு வழங்கவில்லை என்றும் பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டியிருந்தார்.
இந்நிலையில், மேற்கு வங்க மாநிலத்தின் தலைமை செயலாளர் ராஜீவ் சின்ஹாவுக்கு மத்திய உள்துறை செயலாளர் அஜய் குமார் பல்லா எழுதியுள்ள கடிதத்தில், பேரிடர் மேலாண்மை சட்டத்தின்படி மத்தியக் குழுவுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கும்படி குறிப்பிட்டுள்ளார்.