புதிய தொலைத்தொடர்பு கொள்கையின்படி, தொலைத்தொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்கள் தங்கள் மொத்த வருவாயில் குறிப்பிட்ட சதவீதத்தை சரிகட்டப்பட்ட வருவாய் பகிர்வுக் கட்டணம் (ஏ.ஜி.ஆர்) என்ற உரிம கட்டணமாக மத்திய அரசுக்கு செலுத்த வேண்டும். இதற்கு கால அவகாசம் கோரி ஜியோ, ஏர்டெல், ஆர்.காம், ஏர்செல் மற்றும் வீடியோகான் ஆகிய தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தனித்தனியே நீதிமன்றத்தில் மனுக்களை தாக்கல் செய்திருந்தன.
இந்த மனுக்களை ஒன்றிணைத்த நீதிமன்றம் அதன் மீதான விசாரணையை மேற்கொண்டு வருகிறது. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அருண் மிஸ்ரா, எஸ். அப்துல் நசீர் மற்றும் எம்.ஆர். ஷா ஆகியோர் அடங்கிய அமர்வுக்கு முன்பாக இந்த வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு தொடர்பான விசாரணை இன்று(ஆக.25) உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றது.
அப்போது தொலைத்தொடர்பு துறை சார்பில் ஆஜரான மத்திய அரசின் தலைமை வழக்குரைஞர் துஷார் மேத்தா, "தொலைத்தொடர்பு துறையின் வழிகாட்டுதல்களின்படி ஸ்பெக்ட்ரம் வர்த்தகத்திற்கு முன்னர் ஏஜிஆர் தொடர்பான நிலுவைத் தொகை உள்ளிட்ட அனைத்து கடன்களையும் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் திருப்பிச் செலுத்த வேண்டும்.
தொலைத்தொடர்பு நிறுவன வாடிக்கையாளர்களிடமிருந்து கூட்டாகவோ அல்லது தனித்தனியாகவோ நிலுவைத் தொகையை வசூலிக்க டாட் (தொலைத்தொடர்பு துறை) முடிவெடுத்துள்ளது" என்று அவர் தெரிவித்தார். வாதத்தை கேட்டறிந்த நீதிமன்றம்," நொடித்துப்போன மற்றும் திவால்நிலையில் உள்ள நிறுவனங்களிடம் சட்டப்படியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
நலிவடைந்த தொடர்பு நிறுவனங்களிடம் அலைக்கற்றையை விற்பனை செய்தால், அவர்களிடமிருந்து நிலுவைத் தொகையை எவ்வாறு பெற முடியும் ? . ஏ.ஜி.ஆர். தொகையானது அவர்களிடமிருந்து முழுமையாக மீட்கப்பட வேண்டும். இந்த நிறுவனங்கள் ஸ்பெக்ட்ரம் பகிர்வு ஒப்பந்தங்களை செய்துக்கொள்ளும் முன்பாகவே நிலுவைத் தொகையை செலுத்த வேண்டும்.
இதனை அரசு உறுதிப்படுத்த வேண்டும். ஏஜிஆர் தொடர்பான நிலுவைத் தொகையை செலுத்த நிறுவனங்கள் தயாராக இல்லை என்றால், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டை ரத்து செய்து உத்தரவிடலாம் என நீதிமன்றம் கருதுகிறது. எந்தவொரு விற்பனை ஒப்பந்தத்திலும் நுழைவதற்கு முன்பு இந்த நிறுவனங்கள் நிலுவையில் உள்ள தொகையை அளித்துள்ளனரா என்பது உறுதிப்படுத்தப்பட வேண்டும். இதனை அலைக்கற்றை (ஸ்பெக்ட்ரம்) வர்த்தக வழிகாட்டுதல்கள் கட்டாயமாக்க வேண்டும்" என உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து வழக்கின் மீதான விசாரணை செப்டம்பர் மாதம் 16 ஆம் தேதிக்கு ஒத்து வைக்கப்பட்டது.
இதையும் படிங்க:நிவாரணம் வழங்க முடியாத நிலையில் அரசு - கலக்கத்தில் டெலிகாம் ஆபரேட்டர்கள்!