பெங்களூரு: மங்களூரை சேர்ந்த இளம்பெண் ஒருவர், புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக தனது 24 அங்குலம் (இன்ச்) தலைமுடியை அன்பளிப்பாக வழங்கியுள்ளார்.
கர்நாடக மாநிலம், மங்களூரில் சக்தி நகரைச் சேர்ந்தவர் ரேஷ்மா ராம்தாஸ். இவரின் தோழி ஒருவர், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தனது தலைமுடியை புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அன்பளிப்பாக வழங்கினார். இச்செயல் ரேஷ்மாவை கவர்ந்ததைத் தொடர்ந்து, தலைமுடியை தானம் செய்வதற்காக அமைப்பு குறித்து விசாரிக்க தொடங்கியுள்ளார்.
இறுதியில் அப்பெண்ணின் கணவர் திருச்சூர் ஹேர் பேங்கை கண்டறிந்தார். அவர்கள் குறைந்தபட்சம் 8 அங்குலம் தலைமுடி தானம் செய்ய வேண்டும் என தெரிவித்திருந்தனர். ஆனால், ரேஷ்மா ஒரு படி மேல் சென்ற 24 அங்குலம் தலைமுடியை நன்கொடையாக வழங்கினார். இதுகுறித்து அவர் கூறுகையில், "நான் என் தலைமுடியை கேரளாவில் உள்ள திருச்சூரின் ஹேர் பேங்கிற்கு புற்றுநோயால் பாதிப்பவர்களுக்காக அன்பளிப்பாக வழங்கினேன்.
கரோனா தொற்றின் காரணமாக எங்களால் நேரடியாக செல்ல முடியவில்லை. ஆனால், கூரியர் மூலமாக முடியை பேங்கிற்கு அனுப்பி விட்டோம்" எனத் தெரிவித்தார். இதை தொடர்ந்து பேசிய ரேஷ்மா கணவர் , " ஏழை மக்களுக்கு உதவ எங்களிடம் பணம் இல்லை. ஆனால், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஏழை மக்களுக்கு எனது மனைவி முடி தானாமாக கிடைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். என் மனைவியை கண்டு நான் பெருமைப்படுகிறேன். வாய்ப்பு கிடைத்தால் என் தலைமுடியையும் தானம் செய்ய நான் தயாராக இருக்கிறேன்" எனத் தெரிவித்தார்