காரின் முன்இருக்கையில் ஓட்டுநர் அருகே அமர்பவர்களுக்கும் ஏர்பேக் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்த கருத்து வரவேற்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ள நிலையில், இந்த முடிவால் ஏர்பேக்குகளின் விலை உயரும் என பொருளாதார வல்லுநர்கள் கருதுகின்றனர்.
இதுகுறித்து ஆட்டோமொபைல் டீலர்ஸ் சங்கங்கள் கூட்டமைப்பின் தலைவர் விங்கேஷ் குலாட்டி கூறுகையில், "உலகளாவிய பாதுகாப்பு தரத்தில் இப்பாதுகாப்பு வழிமுறை இந்தியாவிற்கு தேவைப்படும் ஒன்றாகக் கருதப்படுகிறது. ஆனால், ஏற்கனவே, ஏப்ரல் மாதம் முதல் BS6 வழிமுறைகள் கட்டாயப்படுத்தப்படும் என்ற அறிவிப்பு நிறுவனங்களை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.
விலையைக் கருத்தில் கொண்டால், காரின் முன்இருக்கையில் ஓட்டுநர் அருகே அமர்பவர்களுக்கு ஏர்பேக் கட்டாயப்படுத்தப்பட்டிருப்பது மேலும் சிக்கலை உண்டாக்கியுள்ளது. இரண்டாவது ஏர்பேக் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது குறுகிய கால விற்பனையில் தாக்கத்தை ஏற்படுத்தும்.
இந்த முடிவு நிறுவனங்களை பாதிக்கும். எனவே, உற்பத்தி பொருள்களின் பெரும்பாலான செலவை 'ஒரிஜினல் எக்விப்மென்ட் மேனுஃபாக்சரர்ஸ்' ஏற்க வேண்டும். அப்போதுதான், கரோனாவால் பாதிப்படைந்த நிறுவனங்களுக்கு வளர்ச்சி ஏற்படும்" என்றார்.