உத்தரப் பிரதேச மாநிலம் பிரதாப்கர் மாவட்டத்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அமிங்கா பிரசாத் பட்டேல் (22) என்ற இளைஞரை சிறுமியின் உறவினர்கள் மரத்தில் கட்டிவைத்து உயிருடன் எரித்துக்கொன்றுள்ளனர்.
இந்தத் தகவல் கிடைத்ததும் காவல் துறையினர் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்துசென்றனர். ஆனால், ஆத்திரமடைந்த உள்ளூர் கிராம மக்கள் காவலர்களின் இரண்டு வாகனங்களுக்குத் தீவைத்தனர்.
இந்த வழக்கில் தொடர்புடைய சிறுமியின் தந்தை ஹரிசங்கர், சுபம் என்கிற இருவரை காவல் துறையினர் கைதுசெய்துள்ளனர். அவர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது அப்பகுதி முழுவதும் காவல் துறை கட்டுப்பாட்டில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமிங்கா பிரசாத் பட்டேல் தனது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாகவும், சிறுமியின் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டதாகவும் கடந்த மார்ச் 1ஆம் தேதி ஹரிசங்கர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்திருந்தார்.
தற்போது இளைஞர் எரித்துக் கொலைசெய்யப்பட்டிருப்பதற்கு இதுவே காரணமாக இருக்கலாம் எனக் காவல் துறை தரப்பில் சந்தேகிக்கப்படுகிறது.
இதையும் படிங்க:கூட்டுப் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்ட 17 வயது பெண் : உத்தரப் பிரதேசத்தில் தொடரும் அத்துமீறல்கள்