கொல்கத்தா மாநிலம் கீதாஞ்சலி மைதானத்தில் நடந்த "ஹோலி மிலான்" நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி பாஜகவை கடுமையாக விமர்சித்து பேசினார். அவர் கூறுகையில், பாஜக பிரிவினைவாத அரசியல் செய்வதாகவும், நாட்டை துண்டாக்க முயற்சிப்பதாகவும், தான் அதனை அனுமதிக்க மாட்டேன் எனவும் கூறினார்.
ஒரு நாட்டின் தலைவர் அனைத்து மக்களையும் விரும்ப வேண்டும் எனவும், மகாத்மா காந்தி, சுபாஷ் சந்திர போஸ், சர்தார் வல்லபாய் படேல், ராஜேந்திர பிரசாத் ஆகியோர் இந்தியாவின் அனைத்து மக்களையும் விரும்பியதாக மம்தா தெரிவித்தார். அதிகாரத்தில் இருக்க மக்களுடன் மக்களாக ஒன்றிணைய வேண்டும் எனவும், பாஜக அதை செய்ய தவறி வருவதாகவும் குற்றம்சாட்டினார்.
மேலும், தன் கட்சி அனைத்து மாநில மக்களை மதிப்பதாகவும், பிகாரி-பெங்காலி மக்களிடையே பாகுபாடு பார்த்ததில்லை என்றும் கூறினார். பாஜக ஆளும் உத்தரப்பிரதேசத்தில் அப்பாவி மக்கள் மீது சில மதவாத கும்பல் நிகழ்த்தும் வன்முறைகள் அதிகரித்துள்ளதாகவும், ராமர் பெயரை உச்சரித்து விட்டு மதத்தின் பெயரில் அரசியல் செய்த பாஜக ஐந்து வருடத்தில் ஒரு ராமர் கோயிலைக் கூட கட்டவில்லை எனவும் குற்றம்சாட்டினார்.