ஜார்க்கண்ட் மாநிலத்தில் இந்தாண்டு இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடக்கவுள்ளது. இதனால், பாஜக சார்பில் தல்டான்கன்ஜியில் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. இந்த பொதுக் கூட்டத்தில் அக்கட்சியின் செயல் தலைவர் ஜே.பி. நட்டா கலந்து கொண்டு பேசுகையில், "மக்களின் பிரச்னைகளை தவிர்த்து காஷ்மீர், முத்தலாக் போன்ற விவகாரங்களை தேர்தல் பிரச்னையாக மாற்றுங்கள். ஒரு நாடு, ஒரு அரசியலமைப்பு என்ற கனவை பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் நிறைவேற்றியுள்ளனர். இந்த முடிவு ஜம்மு - காஷ்மீர் மக்களுக்கு நன்மை பயக்கும்.
18 கோடி தொண்டர்களை கொண்ட பாஜக உலகின் இரண்டாவது பெரிய கட்சி. பாஜக உறுப்பினர்கள் மேற்குவங்கத்திலும், ஜம்மு - காஷ்மீரிலும் அதிகரித்துள்ளனர்" என்றார். ஜார்க்கண்ட் மாநிலத்தில் காங்கிரஸ், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவுடன் சேர்ந்து போட்டியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது, பாஜகவுக்கு பெரும் சவாலாக இருக்கும் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.