மகாராஷ்டிராவின் மும்பை ஆர்தர் ரோடு சிறையில் இருக்கும் கைதி ஹரிஷ் மாண்ட்விகருக்கு உதவியதற்காக கடந்த டிசம்பர் 25ஆம் தேதி சிறைக்காவலர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
இது தொடர்பாக, தீவிரவாத தடுப்பு குழு அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது. அதில்,”2015ஆம் ஆண்டு தீவிரவாத தடுப்புக் குழுவினரால் விசாரிக்கப்பட்டு வந்த ஒரு வழக்கில், சாஜித் எலெட்ரிக்வாலா என்பவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. சாஜித் அந்த வழக்கில் பிரதான குற்றவாளி. 2015ஆம் ஆண்டு சாஜித் எலெக்ட்ரிக்வாலா மும்பை ஆர்தர் சிறையில் அடைக்கப்பட்டார்.
அந்த வழக்கில் இருந்து தப்புவதற்காக, அவர் முக்கியமான சாட்சியங்களைக் கூட கலைக்க முயன்றார். ஐந்து வருடங்களாக சிறைவாசம் கண்ட சாஜித், விடுதலையை எதிர்நோக்கி திட்டம் தீட்டி வந்தார். இந்நிலையில்தான் ரவுடி மாண்ட்விகர் இந்தாண்டு அதே சிறையில் அடைக்கப்பட்டார். சாஜித் இருந்த சிறைப்பிரிவுக்கு அருகில் இருந்த உயர் பாதுகாப்பு சிறையில் மாண்ட்விகரும் அடைக்கப்பட்டிருந்தார். இருவரும் நட்பாகினர்.
சாஜித் தன்னை வழக்கில் இருந்து விடுவிக்க ரவுடி மாண்ட்விகரிடம் உதவி கோரினார். வழக்கில் உள்ள பிரதான சாட்சியை பொய்சாட்சி கூற வைப்பதற்காக இருவரும் சதித்திட்டம் தீட்டினர். இவர்களுக்கு சிறைக்காவலர் ஒருவர் உதவியது விசாரணையில் தெரிய வந்தது.
ஹரிஷ் மாண்ட்விகர் தனது சிறை நண்பன் சாஜித்திற்கு உதவ வலியுறுத்தி தனது கைக்கூலிகளுக்கு எழுதிய துண்டுக்குறிப்பை சிறைக்காவலர் வெளியிலுள்ள மாண்ட்விகர் ஆதரவாளரளிடம் கொடுத்துள்ளார்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையடுத்து சிறைக்காவலரைக் கைது செய்த தீவிரவாத தடுப்புக் குழு அவரை நாளை வரை காவலில் வைத்து விசாரணை செய்யவுள்ளது.
இதையும் படிங்க:நெல்லையில் போலீசாருக்கு டிமிக்கி கொடுத்து வந்த பலே கொள்ளையர்கள் கைது!