யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்தரப் பிரதேச அரசு, அண்மையில் சட்ட விரோத மதமாற்றத்துக்கு எதிராக அவசர சட்டம் கொண்டுவந்தது. அதன்படி, திருமணத்திற்காக வற்புறுத்தலின் பெயரில் மதம் மாறுவதை சட்ட விரோதம் என்று இந்த அவசர சட்டம் வரையறுக்கிறது.
இது சிறுபான்மையினருக்கு எதிராக குறிவைத்து உருவாக்கப்பட்ட சட்டம் என எதிர்க்கட்சிகளும் சமூக அமைப்புகளும் தொடர் குற்றஞ்சாட்டிவருகின்றன. இந்த அவரச சட்டத்தின் கீழ் பலர் உத்தரப் பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட நிலையில், உத்தரகாண்ட் மற்றும் இமாச்சல் பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும் இதுபோன்ற சட்டங்கள் அமல்படுத்தப்பட்டன.
இது தனி மனித சுதந்திரம் என்ற அடிப்படை உரிமையை பறிக்கும் விதமாக உள்ளது என உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. இது தொடர்பான விசாரணை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ பாப்டே தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
இதை விசாரித்த நீதிபதிகள், சட்டத்திற்கு உடனடியாக தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை நிராகரித்தனர். அதேவேளை, இந்த சட்டம் தொடர்பாக விளக்கமளிக்க வேண்டும் என மூன்று மாநில அரசுகளுக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
இதையும் படிங்க: வரும் ஜூலைக்குள் 30 கோடி பேருக்கு தடுப்பூசி: பட்டியல் விரைவில் தயார்