இதுதொடர்பாக திருப்பதி தேவஸ்தான நிர்வாகத் தலைவர் ஒய்.வி. சுப்பாரெட்டி கூறியதாவது:
'கரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் மிகவும் கடுமையாக மேற்கொள்ளப்படவுள்ளன. பக்தர்களுக்கிடையே ஆறு அடி இடைவெளி எனப்பல்வேறு பாதுகாப்புப் பணிகள் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளன.
திருப்பதி கோயில் நிர்வாகத்தைச் சேர்ந்த பணியாளர்கள் சுமார் 100 பேர் வரை, ஜூன் 8ஆம் தேதி முதல் இரண்டு அல்லது மூன்று நாட்கள் கோயிலில் நுழைவது, தரிசனம் செய்வது என ஒத்திகை செய்யவுள்ளோம்.
இதில் அனைவரும் திருப்தி அடைந்தால் மட்டுமே, பக்தர்கள் கோயிலுக்கு அனுமதிக்கப்படுவார்கள். அத்துடன் ஆன்லைனில் டிக்கெட் கிடைப்பதற்கான ஏற்பாடுகளும் செய்யப்படும்.
டிக்கெட் பெறாமல் வருபவர்கள், தங்களது தனிப்பட்ட தகவல்களை அளித்து, டிக்கெட் பெற்றுக்கொண்டு இலவச தரிசனத்துக்காக அனுமதிக்கப்படுவர்.
கரோனா பரவாமல் தடுப்பதற்காக, திருமலையிலுள்ள மலைப்பகுதி மற்றும் கோயில் வளாகம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகளைத் தீவிரப்படுத்தியுள்ளோம்.
கரோனாவால் பொது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்தாலும், நாள்தோறும் நடக்கும் பூஜைகளும், பாரம்பரிய நிகழ்வுகளும் கோயில் அர்ச்சகர்களால் செயல்படுத்தப்பட்டன' என்றார்.
முன்னதாக, கரோனா வைரஸ் தொற்றுப் பரவல் காரணமாக, கடந்த மார்ச் 20ஆம் தேதி முதல் கோயிலுக்குப் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. இதைத்தொடர்ந்து, சுமார் 2 மாத இடைவெளிக்குப் பிறகு, தற்போது மீண்டும் கோயிலுக்குள் பக்தர்கள் அனுப்புவதற்கான ஒத்திகை நடைபெறவுள்ளது.