மகாராஷ்டிரா மாநிலம் சிந்துதுர்க் மாவட்டத்திலுள்ள கிராமத்தில் வசித்து வருபவர் வசந்தி பண்டேகர். இவரது கணவர் சந்திரகாந்த், மும்பையிலுள்ள தன் மகன் அமித்தை பார்க்கச் சென்றபோது உடல்நிலை சரியில்லாமல் போனதையடுத்து, அவருக்கு மேற்கொள்ளப்பட்ட சோதனையில் புற்று நோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.
நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு கடந்த மார்ச் 23ஆம் தேதி அமல்படுத்தப்பட்ட நிலையில், ஊரடங்கிற்கு முந்தைய நாள் புற்றுநோய் உறுதிசெய்யப்பட்டு சந்திரகாந்த் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
தொடர்ந்து மேற்கொள்ளப்பட பரிசோதனையில் புற்றுநோயின் இறுதிக் கட்டத்தில் இருந்த அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் ஏப்ரல் 16ஆம் தேதி உயிரிழந்தார்.
இந்நிலையில் தன் தாய் வசந்தி கிராமத்தில் தனியே வசித்து வந்ததால், தந்தைக்கு புற்றுநோய் இருந்ததையே அவரிடமிருந்து மறைத்து வைத்திருந்த மகன் அமித்திற்கு ஊரடங்கின் காரணமாக தந்தையின் சடலத்தை சொந்த கிராமத்திற்கு எடுத்துசெல்ல முடியாத அவலநிலை ஏற்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து காணொலி அழைப்பு மூலம் சந்திரகாந்தின் இறுதி சடங்குகளில் தாய் வசந்தியை பங்குபெறச் செய்து, இறுதி சடங்குகளை அமித் நடத்தி முடித்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: அகமதாபாத்தில் 21 காவலர்களுக்கு கரோனா