இத்தாலி நாடு கோவிட்-19க்கு எதிராக போராடிய விதம் பல நாடுகளுக்கு தகுந்த பாடங்களை புகட்டும் வகையில் அமைந்துள்ளது. நாம் அவர்களின் செயல்பாடுகளை கவனித்தால் மட்டுமே, தவறு நேராமல் வைரஸ் தொற்றை அகற்ற முடியும்.
- முதலாவதாக நாம் இந்த நோய்க் கிருமியின் தீவிரத்தை உணர வேண்டும்.
- கரோனா நோய்க் கிருமி மனிதர்களை மறைமுகமாகத் தாக்குகிறது.
- ஒன்று முதல் இரண்டு வாரங்களுக்கு பிறகுதான் சில அறிகுறிகளுடன் தொற்றின் தாக்கத்தை தெளிவாக புரிந்துகொள்ள முடிகிறது.
கரோனாவா எங்களுக்கா கெத்து காட்டும் சில நாடுகள்
இத்தாலியின் ஆளும் அரசியல் தலைவர்கள் வைரஸின் தாக்கம் முதலில் அதிகரிக்காததை வைத்து, தப்பு கணக்கிட்டு தாமதமாக செயலாற்றினர். அரசின் அவசர கால அறிவிப்புகளை பொதுமக்களும், அரசியல் தலைவர்களுமே கருத்தில் கொள்ளாமல் நடந்த விளைவுதான், அந்நாட்டில் கோவிட்-19 சமூகப் பரவலாக மாற முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
இவ்வளவு பெரிய அபாயகர பரவல் நோயின் வீரியம் தெரிந்தும், சில அரசியல் தலைவர்களே அங்கு கைகுலுக்குவது போன்ற செயல்பாடுகளில் ஈடுபட்டனர். அதில் ஒருவருக்கு ஒரு வாரம் கழித்து கரோனா நோய்க் கிருமித் தொற்று உறுதியாகியிருந்தது.
இதுபோன்ற நிலையற்ற தன்மைக்கொண்ட பெருந்தொற்று; அதாவது முதலில் சிறிய அளவில் பரவி, பெருந்தொற்றாக மாறக் கூடிய தன்மைக் கொண்ட கரோனா வைரஸை கையாள்வதில் சிக்கல்களும், சவால்களும் நிறைந்திருக்கும் என்பதே உண்மை. இதன் சவால்கள் அனைத்தும் தினம் தினம் மாறக்கூடியதாக இருக்கும்.
இதனை தடுக்க முதற்கட்டத்திலிருந்தே தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அப்படி இல்லையென்றாலும் ஒரு நபர் பாதிப்புக்குள்ளாவதற்குள் தடுப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும். இது வெறும் சாதாரண விளையாட்டு காரியமல்ல. அரசியல் தலைவர்கள் அறிவிப்புகளை வெளியிட்டுவிட்டு, அதனை பெயரளவில் செயல்படுத்துவது என்பது, இதுபோன்ற பெருந்தொற்று வியாதிகளுக்கு கைகொடுக்காது.
இத்தாலி நாட்டில் சிறிதளவே பரவியிருந்த கோவிட்-19, நாளடைவில் சமூக பரவலாக மாறி லட்சக்கணக்கான மக்களை தொற்றிக்கொண்டது. முதலில் இத்தாலி அரசு நோய் தாக்கிய சில இடங்களை மட்டுமே முடக்கியது. ஆனால் நாளடைவில் அதன் தாக்கம் அதிகரிக்கவே, நாட்டின் அனைத்து எல்லைகள் உட்பட, அனைத்து இடங்களையும் முடக்கியது. முதலில் அவர்கள் முடக்கிய சில நகர மக்களால்தான், நாடு முழுவதிலும் இப்பெருந்தொற்று பரவியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
"வீட்டில் இருங்கள், பாதுகாப்பாக இருங்கள்" அறிவுரை கூறும் உலக அதிசயம்
காரணம், கரோனா நோய்க் கிருமி அமைதியாக பரவக்கூடியதாகும். எந்த விளைவுகளையும் புலப்படுத்தாமல், சில நாட்கள் உடலில் தங்கி, பின் தரமறிந்து பற்றிக்கொண்டு உயிரைப் பறிக்கவல்லது. கோவிட்-19 தாக்கத்தை வைத்தும், அதன் மூலம் ஏற்பட்ட மரணங்களை வைத்தும் நாம் இதன் பரவலை கணக்கிடமுடியாது.
இதுகுறித்து ஹார்வேர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில், சில இடங்களை மட்டும் முடக்கும்போது, நோய்க் கிருமி அங்கு சென்று தங்கிவிடும். பின்னர் அமைதியாக பரவத் தொடங்கும். எனவே, இம்மாதிரியான சூழலைக் கையாள மொத்தமாக அனைத்து இடங்களையும் முடக்குவதே சரியானதாக அமையும்; நோய்ப் பரவுவதையும் கணிசமான அளவு குறைக்கும்.
வடக்கு இத்தாலியை முடக்கும் சூழலில், தெற்கு இத்தாலி ஒரு பெரிய நோய்க் கிருமித் தொற்றை உணரத் தொடங்கியது. இத்தாலி நமக்களித்த பாடமாக, சமூக விலகலையும், மக்களின் நடமாட்டத்தையும் கட்டுப்படுத்த தவறினால் விளைவுகள் பெரிதாக அமையும் என்பதே.
ஹார்வேர்டு வல்லுநர்கள் இத்தாலி நாட்டை கணக்கிடுவதையும், ஆய்வு செய்வதையும் விடுத்து, கரோனா தொற்றை முதலிலேயே கண்டறிந்து சரியான நடவடிக்கைகள் மேற்கொண்ட தைவான், தென் கொரியா போன்ற நாடுகளின் நகர்வுகளை கண்காணித்ததாக தெரிவித்துள்ளது. அதற்கு ஒரே ஒரு காரணம்தான். வளர்ந்த ஐரோப்பிய நாடுகள் சில இதுபோன்று தங்களுக்கு கிடைத்த வாய்ப்புகளை தட்டிக்கழித்து, பெருந்தொற்றை தற்போது எதிர்கொள்ள திணறிவருவதே ஆகும்.
இத்தாலியும், அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளும் எந்த விதத்திலும், ஆசிய நாடுகளின் செயல்பாடுகளை மிஞ்சவில்லை எனத் தெரிவதாக வல்லுநர்கள் தெரிவித்திருக்கின்றனர். சீனா போன்ற நாடுகளில் கரோனா தொற்றின் எண்ணிக்கை நாட்கள், கூட கூட குழந்தை தவழ்வதைப்போல குறைந்துகொண்டே வருவதை காண முடிந்ததாக கூறுகின்றனர். இதனை எந்த வளர்ந்த ஐரோப்பிய நாடுகளும் முதலில் கண்டுகொண்டதாக தெரியவில்லை.
சீனாவில் மீண்டும் தொடங்கும் உற்பத்தி
இச்சூழலில் இத்தாலி நாடு கண்ட வைரஸின் அபாயகரமான தாக்கத்தை வைத்து, பிற நாடுகள் தங்களுக்கான வியூகங்களை வகுக்க முடியும் என வல்லுநர்கள் கூறுகின்றனர். இத்தாலியின் லோம்பார்டி, வெனெட்டோவின் ஆகிய இடங்கள், கரோனா நோய்க் கிருமித் தொற்றைக் கட்டுப்படுத்த கையாண்ட வழிகளில் வெவ்வேறு முடிவுகளைத் தந்தன. அந்த முடிவுகள் பலரையும் ஆச்சியரித்துக்குள்ளாக்கின. ஆம் ஒரு இடத்தில் நோய்த் தடுப்புச் செயல்முறைகள் கைக்கொடுக்கவே, லோம்பார்டியில் செயலற்றுபோனது.
லோம்பேர்டியில் மொத்தம் ஒரு கோடி எண்ணிக்கையிலான மக்கள் தொகை இருப்பதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. அதில், 35 ஆயிரம் மக்களுக்கு கோவிட்-19 நோய் இருப்பது கண்டறியப்பட்டும், 5 ஆயிரம் பேர் மரணம் அடைந்தும் உள்ளனர். இதுவே, வெனெட்டோவில் 50 லட்சம் அளவிலான மக்கள் தொகையில், 7 ஆயிரம் பேருக்கு மட்டுமே கோவிட்-19 நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டது. மரண விகிதத்திலும், 300 மட்டுமே நிகழ்ந்திருப்பது ஆச்சரியப்படுத்தும் தரவுகளாக அமைகிறது. இந்த இடத்தில் கரோனா நோய்க் கிருமியின் பரவல் வெகு குறைவாக இருந்தது. இதற்கான காரணமாக, அந்த இடத்தின் எல்லைகளை கவனமாக கையாண்டு முடக்கியதே என வல்லுநர்கள் கருத்து தெரிவித்திருக்கின்றனர். அதில்,
- நீண்ட பரிசோதனை - அதாவது நோய் அறிகுறி உள்ளவரையும், அவருடன் தொடர்புடைய நபர்களையும் உடனடியாக சோதனைக்கு உட்படுத்தியது.
- சரியான தடமறிந்து பயணித்தல் - எவரேனும் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டால், அவருடன் இருந்த உறவினர்கள், நண்பர்கள் என அனைவரையும் தனிமைப்படுத்திக்கொள்ள செய்தது.
- வீட்டிலேயே நோயைக் கண்டறிதல் - தங்களுக்கு நோய்த் தொற்றின் அறிகுறிகள் இருந்தால், தங்களை தானே தனிமைப்படுத்திக் கொண்டு, மருத்துவர்களை அணுகி, வீட்டிற்கே வந்து மாதிரிகளை எடுத்துச்செல்ல வைத்து, நோய்க் கிருமியின் பரவலை தடுப்பதே சரியான அணுகுமுறையை கையாண்டது
- மக்களுடன் அதிக தொடர்பில் உள்ளவர்களை கண்காணித்தல் - மருத்துவர்கள், செவிலியர்கள், மளிகைக் கடை கணக்காளர்கள், மருந்துக் கடை நடத்துபவர்கள், நோயாளிகளை பராமரிப்பவர்கள் என மக்களுடனும், நோயாளிகளுடனும் அதிக தொடர்பில் உள்ளவர்களை பாரபட்சமின்றி கண்காணித்தது.
மேற்குறிப்பிட்டது போல செயல்முறைகளை வகுத்ததன் விளைவாக, நோய்ப் பரவலை கட்டுக்குள் வைத்திருந்தது இத்தாலியின் வெனெட்டோ. ஆனால் லோம்பேர்டி எதன் விளைவால் தன் கட்டுப்பாட்டை இழந்தது. அதனை கீழே காணலாம்.
- மக்களையும், நோயாளிகளையும் அதிகளவில் கையாளும் மனிதர்களை சரியாக பரிசோதனைக்கு உட்படுத்தாமல் விட்டது
- நோயாளிகள் குவிந்தவுடன், என்ன செய்வதென்று தெரியாமல், திகைத்து நின்ற மருத்துவமனைகள்.
ஒரு நாட்டின் இரு இடங்களில் நடந்தேறிய நோய்க் கிருமித் தொற்றின் விளைவுகளை, நாம் கண்கூடாக இத்தொகுப்பின் மூலம் உணரமுடியும். வெனெட்டோவின் நகர்வுகளை உலக நாடுகளுடன் சேர்ந்து இந்தியாவும் கவனத்தில் கொள்ளவேண்டும். ஒரு பெருந்தொற்றினை தடமறிந்து அழிப்பது என்பது அவ்வளவு எளிதல்ல. அதன் பரவலை தடுப்பதே புத்திசாலித்தனம்.
உலகச் சந்தையை பதம் பார்க்கும் கரோனா!
ஆனால், அதன் பரவலை தடுக்க எம்மாதிரியான நடவடிக்கைகளையும் எடுக்க தயாராக இருக்க வேண்டுமென ஹார்வேர்டு ஆராய்ச்சி கழகம் அறிவுறுத்தியிருக்கிறது. எவ்வளவு பேர் என்பதெல்லாம் கணக்கில்லை. சோதனைகள் மேற்கொள்வதை அசாத்திய அளவில் முடுக்கி விடவேண்டும். ஏனென்றால், கரோனா நோய்க் கிருமியின் பரவலை தடுத்தால் மட்டுமே, அதனை அழிக்க முடியும்.
வீட்டிலிருங்கள்… விழித்திருங்கள்… விலகியிருங்கள்